கேஎம்சிஹெச் மருத்துவமனை சார்பில் புற்றுநோய் இமேஜிங் சங்கத்தின் தேசிய கருத்தரங்கு

Spread the love

மேற்கு தமிழ்நாட்டின் புகழ்பெற்ற மற்றும் முன்னணி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையான கோவை மெடிக்கல் சென்டர் அண்ட் ஹாஸ்பிடல் சார்பில் புற்றுநோய் இமேஜிங் சங்கத்தின் (Society of Oncologic Imaging, India) தேசிய கருத்தரங்கு, கோவையில் உள்ள மெர்லிஸ் (Merlis) ஹோட்டலில் ஆகஸ்ட் 15 முதல் ஆகஸ்ட் 17 வரை நடைபெற்றது. இதுபோன்ற கருத்தரங்கு கோவையில் நடைபெறுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

புற்றுநோய் இமேஜிங் சங்கம் என்பது இமேஜிங் தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்கான ஒரு பிரத்யேக அமைப்பாகும். டாக்டர் பாக்யம் அவர்கள் இதன் தலைவராகவும் திரு. பங்கஜ் சர்மா பொதுச் செயலாளராகவும் இந்த அமைப்பை சிறந்த முறையில் வழிநடத்தி வருகின்றனர்.
இந்தியாவில் மார்பகம், கருப்பை வாய் மற்றும் வாய் சார்ந்த புற்றுநோய்கள் அதிகரித்து வரும் நிலையில் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது மிக முக்கியம். அதனடிப்படையில் சிகிச்சையின் வெற்றி வாய்ப்பும், உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பும் கணிசமாக அதிகரிக்கிறது.
சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ, பெட் ஸ்கேன் மற்றும் மேமோகிராம் போன்ற மேம்பட்ட இமேஜிங் நுட்பங்கள், புற்றுநோய்க் கட்டிகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய உதவுகின்றன. இதனால் சரியான நேரத்தில் நோயை அறிந்து சிகிச்சை அளிக்க முடிகிறது.

மூன்று நாள் நிகழ்வானது, முதல் நாளான ஆகஸ்ட் 15 அன்று சிக்கலான புற்றுநோய் ஸ்கேன்களைக் கையாள்வது குறித்த பயிற்சியுடன் தொடங்கியது. ஹார்வர்ட் மற்றும் மிச்சிகன் பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆஸ்திரேலியா நாட்டின் சர்வதேச வல்லுநர்கள் இதனை வழி நடத்தினார்கள்.
ஆகஸ்ட் 16 மற்றும் 17 தேதிகளில் கதிரியக்க நிபுணர்களுக்கான தொடர் விரிவுரைகள் நடைபெற்றன. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சீனா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளிலிருந்து ஏழு சர்வதேச வல்லுநர்களும், இந்தியாவின் சிறந்த கதிரியக்க நிபுணர்கள் 50 பேரும் கலந்துகொண்டார்கள்.

இந்தியா முழுவதும் புற்றுநோய் குறித்த அறிக்கைகளை தரப்படுத்தல் குறித்து டாக்டர் அன்பரசு ஒரு சிறப்பு விளக்கவுரை நிகழ்த்தினார். பல போட்டி ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டு, சிறந்தவற்றுக்கு பதக்கங்களும் வழங்கப்பட்டது.

இந்த கருத்தரங்கில் இந்தியா முழுவதிலும் இருந்து 600-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

கேஎம்சிஹெச் தலைவர் டாக்டர் நல்லா ஜி. பழனிசாமி மற்றும் செயல் இயக்குனர் டாக்டர் அருண் பழனிசாமி, கருத்தரங்கை வெற்றிகரமாக நடத்த உறுதுணையாக இருந்த கதிரியக்க சேவைத் துறை தலைவரும் கருத்தரங்கு ஏற்பாட்டுத் தலைவருமான டாக்டர் மேத்யூ செரியன் மற்றும் அடிவயிறு இமேஜிங்,அபலேஷன் சிகிச்சை முதன்மை ஆலோசகரும் கருத்தரங்கு அமைப்புக் குழுவின் செயலாளருமான டாக்டர் வெங்கடேஷ் மற்றும் அவர்கள் குழுவினரைப் பாராட்டினர்.