மருத்துவத் துறையில் ஏற்பட்டு வரும் அதிநவீன முன்னேற்றங்கள் குறித்து மருத்துவர்களும் மருத்துவம் பயிலும் மாணவர்களும் அறிந்துகொண்டு பலன்பெற வேண்டும் அதன் மூலம் மக்களுக்கு மேலும் சிறப்பான மருத்துவ சேவைகள் அளித்திட வேண்டும் என்ற நோக்கத்துடன் கேஎம்சிஎச் மருத்துவமனை தொடர்ந்து பல மருத்துவக் கருத்தரங்குகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் தீவிர இருதய சிகிக்சை மற்றும் எக்மோ பற்றிய ஒரு நாள் கருத்தரங்கு கேஎம்சிஎச் கலையரங்கில் நடைபெற்றது. இதில் பல்வேறு மருத்துவப் பிரிவுகளைச் சேர்ந்த நிபுணர்கள், மருத்துவர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
ஆபத்தான நிலையில் உள்ள இருதய நோயாளிகளுக்கான சிகிச்சை முறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும் இதயம் அல்லது நுரையீரல் செயலிழந்த நோயாளிகளைக் காத்திட உதவும் எக்மோ கருவி குறித்தும் கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது. இதுகுறித்து பல்வேறு மருத்துவ நிபுணர்கள் உரை நிகழ்த்தினர். கலந்துரையாடல்களும் நடைபெற்றன.
இந்திய எக்மோ கழக தலைவர் டாக்டர் பிரணய் ஓசா எக்மோ உருவான விதம் குறித்து தனது உரையில் எடுத்துரைத்தார். இக்கருத்தரங்கில் பல்வேறு ஊர்களில் இருந்து வந்து கலந்துகொண்ட நிபுணர்கள் விபரம் வருமாறு: சென்னை ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை, தீவிர சிகிச்சை மருந்துகள் துறை தலைவர் டாக்டர் ராம் ராஜகோபாலன், பெங்களூரு மணிபால் மருத்துவமனை தீவிர சிகிச்சை மருந்துகள் துறை துறை தலைவர் டாக்டர் பிரதீப் ரங்கப்பா மற்றும் சென்னை எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனை இருதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சுரேஷ் ராவ்.
கருத்தரங்கில் உரையாற்றிய கேஎம்சிஎச் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் நல்லா ஜி பழனிசாமி, உலகத்தரமான மருத்துவ சேவைகள் அளித்திட வேண்டும் என்ற நோக்கத்துடன் கேஎம்சிஹெச் உறுதிப்பாட்டுடன் செயல்பட்டு வருகிறது. மருத்துவ சமூகத்தினர் பலன்பெறும் வகையில் அவர்கள் துறை அறிவையும் தங்களது திறமைகளையும் வளர்த்துக் கொள்ள இதுபோன்ற கருத்தரங்குகள் உதவிடும் என்று அவர் குறிப்பிட்டார். உலக இருதய தினமான செப்டம்பர் 29 அன்று இக்கருத்தரங்கு நடைபெறுவதை சுட்டிக்காட்டிய அவர், இருதய நலம் காப்பதில் அனைவரும் முன்னுரிமை கொடுத்து செயல்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இதயம் அல்லது நுரையீரல் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு செயலிழந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளின் உயிர்காத்திடும் கருவியாக எக்மோ உள்ளது. நோயாளிகளின் உடல்நலன் காப்பதில் உறுதுணையாக விளங்கும் எக்மோ குறித்து கூறுகையில், இதுபோன்ற மிகவும் சிக்கலான சிகிச்சைகளை அளித்திடுவதில் கேஎம்சிஎச் தென்னிந்தியாவில் முன்னணி மருத்துவமனைகளில் ஒன்றாக விளங்குகிறது என்று மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் அருண் பழனிசாமி குறிப்பிட்டார். கடந்த நான்கு ஆண்டுகளில் மூன்று எக்மோ இயந்திரங்கள் மூலம் 150-க்கும் மேற்பட்ட சிகிச்சைகள் செய்து உலகின் வளர்ந்த நாடுகளின் தரத்தை கேஎம்சிஎச் எட்டியுள்ளது என்று அவர் மேலும் கூறினார். பயிற்சியும் அனுபவமும் மிக்க எக்மோ மருத்துவக் குழுவினர், எக்மோவுக்கு என்றே பிரத்யேக தீவிர சிகிச்சைப் பிரிவு ஆகியவற்றின் மூலம் இந்த சாதனை சாத்தியமாகியது என்று அவர் தெரிவித்தார்.
கருத்தரங்கு வெற்றிகரமாக நடைபெறத் தேவையான ஏற்பாடுகள் செய்திருந்த கேஎம்சிஎச் தீவிர சிகிச்சை மருந்துகள் துறை தலைவர் டாக்டர் டி. கோபிநாதன் மற்றும் அவரது குழுவினருக்கு அவர் தனது பாராட்டுதல்களை தெரிவித்துக் கொண்டார்.
கேஎம்சிஎச் மருத்துவமனையில் தீவிர இருதய சிகிச்சை மற்றும் எக்மோ கருத்தரங்கு

Leave a Reply