* பரபரப்பை கிளப்பிய சிசிடிவி காட்சிகள்..!
விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், செப்டிக் டேங்கில் விழுந்து மூன்றரை வயது குழந்தை உள்ளே விழுந்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்பத்தி இருக்கிறது. குழந்தையை பள்ளி நிர்வாகமே மீட்டு சிகிச்சைக்கு அனுப்பும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர வைத்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் உள்ள வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் இ சேவை மைய ஒப்பந்த பணியாளராக பணியாற்றி வருபவர் பழனிவேல். இவரது மனைவி சிவசங்கரி. இந்த தம்பதியின் மூன்று வயது பெண் குழந்தை லியா லட்சுமி, விக்கிரவாண்டி காவல் நிலையம் அருகே இருக்கும் செயின்ட் மேரீஸ் என்ற தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வந்துள்ளது.
கடந்த ஜனவரி 3ஆம் தேதி வெள்ளிக்கிழமை, வழக்கம் போல் குழந்தையை பள்ளியில் பெற்றோர் குழந்தை விட்டு சென்றுள்ளனர். குழந்தையானது பகல் 1.50 மணி அளவில் இயற்கை உபாதையை கழிக்க பள்ளி வகுப்பறையில் இருந்து அருகே உள்ள கழிவறைக்கு சென்றுள்ளது. அப்போது கழிவறைக்கு அருகே உள்ள செப்டிக் டேங்க் பகுதியில் மூடியின் மீது ஏறிச் சென்றதாக கூறப்படுகிறது.
செப்டிக் டேங்க் மீது போடப்பட்ட இரும்பு தகடு மூடி துரு பிடித்து இருந்ததால், பாரம் தாங்காமல் குழந்தை செப்டிக் டேங்க் மூடி உடைத்து கொண்டு உள்ளே விழுந்துள்ளது. இதை யாருமே கவனிக்காத நிலையில், மூச்சு திணறி குழந்தை இறந்துள்ளது.
இதனிடையே, செப்டிக் டேங்க் உள்ள பகுதி அருகே உள்ள கட்டிடத்தில் வகுப்பு எடுத்திருந்த குழந்தையின் ஆசிரியர் ஏஞ்சல் என்பவர், நீண்ட நேரமாகியும் குழந்தை வராததால் கழிவறை பகுதிக்கு சென்று பார்த்துள்ளார். எங்கு தேடியும் குழந்தை கிடைக்கவில்லை. அதே நேரம், செப்டிக் டேங்க் மூடி உடைந்திருந்ததை பார்த்து திடுக்கிட்டார். எட்டிப் பார்த்தபோது, குழந்தை இறந்து கிடந்துள்ளது.
இதனையடுத்து பள்ளி நிர்வாகத்தினரே செப்டிக் டேங்க்கில் இருந்த குழந்தையை இரண்டு கம்புகள் பயன்படுத்தி மேலே தூக்கி குழந்தை மீட்டனர். பின்னர், கார் மூலமாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
குழந்தை இறப்பு தொடர்பாக விக்கிரவாண்டி காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரனை செய்தனர். அப்போது குழந்தை செப்டிக் டேங்க்கில் விழுந்ததை மீட்கும் சிசிடிவி காட்சிகளை காவல் துறையினரும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உள்ளிர்ரோடும் பார்வையிட்டனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
குழந்தைகள் பாதுகாப்பு விஷயத்தில் கவனக்குறைவாக இருந்த பள்ளி நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க, தனியார் பள்ளிகளில் ஆய்வு செய்யப்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் கூறினார்.
இந்த சம்பவம் பற்றி கேள்வி பட்டவுடன் குழந்தையின் குடும்பத்தினர் கதறி அழுதனர். பள்ளி நிர்வாகத்தின் அலட்சியத்தால் தான் குழந்தை இறந்ததாக அவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். காலை 11 மணிக்கு குழந்தை உள்ளே விழுந்த நிலையில், பள்ளி விடும்போது மாலை 3 மணிக்குத் தான் குழந்தையை பள்ளி நிர்வாகத்தினர் தேடியதாக உறவினர்கள் குற்றம்சாட்டினர்.
அந்த பள்ளியில் படிக்கும் பிற குழந்தைகளின் பெற்றோர்கள் இணைந்து பள்ளி எதிரே, விழுப்புரம் – சென்னை செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்து உயிரிழந்த குழந்தையின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.
பள்ளி நிர்வாகம் கவனமாக செயல்பட்டிருந்தால், ஒரு குழந்தையின் மரணம் தவிர்க்கப்பட்டு இருக்கும். மாவட்ட கல்வி அதிகாரிகளும் முறையாக பள்ளிகளை ஆய்வு செய்வதில்லை. ஒரு சம்பவம் நடந்த பிறகு மற்ற பள்ளிகளில் உடனே ஆய்வு நடத்துவதில் எந்த பலனும் இல்லை. மாறாக விதிகளை பின்பற்றி பள்ளிகள் இயங்குகின்றனவா? பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக உள்ளனவா என்பதை எல்லாம் மாவட்ட கல்வி அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை.
விக்கிரவாண்டி பள்ளி விஷயத்தில் தவறு புரிந்த யாரையும் தப்பவிடக்கூடாது. அவர்கள் இழைத்த தவறுக்கு நிச்சயம் சட்டப்படி தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்பதே பெற்றோரின் வேண்டுகோளாகும்.
Leave a Reply