கோவை சிரவணபுரம் கெளமார மடாலயத்தில், சிரவை ஆதீன ஆதிகுரு ராமானந்த சுவாமிகள் 68-ம் ஆண்டு நிறைவு விழா மற்றும் பேரூர் ஆதீனம் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் நூற்றாண்டு நிறைவு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிரவையாதீனம் குமரகுருபர சுவாமிகள், பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார், முன்னாள் கல்லூரி கல்வி இயக்குநர் குமாரசாமி, மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள், பழநி ஆதீனம் சாது சண்முக அடிகளார், வரன்பாலையம் திருநாவுக்கரசு திருமடம் மெளன சிவாச்சல அடிகளார், தென்சேரிமலை திருநாவுக்கரசு நந்தவனத் திருமடம் முத்து சிவராமசாமி அடிகளார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.நிகழ்ச்சியில் பக்தமான்மியத்தில் திருமால் திருத்தொண்டர்கள் தொகுதி என்ற நூலை வெளியிட்ட மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன். வெளியிட்டு பேசியதாவது,
மனிதன் தெரிந்தும், தெரியாமலும் தவறு செய்கிறான்.
அந்த தவறுகளை திருத்திக்கொண்டு மேம்படுத்தி கொள்ள ஆன்மிகம் உதவுகிறது. இறை நம்பிக்கை இல்லாத உலகம் இருக்க முடியாது. ஆன்மிகமே சமூகத்திற்கு நல்லது. ஆன்மிக பெரியவர்கள் சமுதாயத்திற்கு வழிகாட்டியாக உள்ளனர்.
மனிதனுக்கு சுய ஒழுக்கம், சுய பண்பாடு ஆகிய நற்குணங்கள் வருவதற்கு ஆன்மிகம் இன்றியமையாதது. எப்படிப்பட்ட தோல்வி வந்தாலும் நேர்மை தவறாமல் இருந்தால் வெற்றி பெறலாம்.
கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி இறந்தவரை தியாகி போன்று சித்தரித்து பேரணி நடத்தும் அவல நிலை நிலவுகிறது. இதுபோன்ற சம்பவங்கள் நம் மண்ணுக்கு நல்லதல்ல.
அரசியல் லாபம் என்ற இருண்ட முகம் அனைத்து நன்மைகளையும் மறைக்கிறது. இந்த இருண்ட முகம் மாற வேண்டுமானால் ஆன்மிகம் செழிக்க வேண்டும்.
தனக்காக இல்லாமல் பிறருக்கு உதவும் குணம் படைக்கும் உள்ளம் படைத்தவர்களாக ஆதீனங்கள் உள்ளனர். சமூகத்தைக் கட்டுப்படுத்தும் ஆணி வேராக இருப்பது ஆன்மிகம் தான்.
ஆன்மிகம் இல்லாமல் மனித வாழ்வு முழுமை அடையாது.
இவ்வாறு அவர் பேசினார்.
குண்டு வைத்தவரை, தியாகி போல சித்தரிப்பது நல்லதல்ல!- சிரவணபுரம் மடத்தில் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேச்சு

Leave a Reply