கிட்னி திருட்டு புகாரில் பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை – அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவிப்பு!

Spread the love

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று நடைபெற்று வரும் நிலையில், கிட்னி திருட்டு விவகாரம் மீதான அதிமுகவின் கவன ஈர்ப்பு தீர்மானம் சட்டசபையில் முக்கிய அம்சமாக அமைந்தது.
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் “கிட்னிகள் ஜாக்கிரதை” எனும் வாசகத்துடன் பேட்ஜ் அணிந்து சட்டசபையில் பங்கேற்றனர்.

இந்த விவகாரத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பதிலளித்தபோது,
“கிட்னி விற்பனை மற்றும் திருட்டு சம்பவங்கள் தற்போதுதான் அல்ல, முந்தைய காலங்களிலும் இடம்பெற்றுள்ளன. நாமக்கல்லில் நடந்த கிட்னி திருட்டு புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இரு இடைத்தரகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்,” என கூறினார்.

அவர் மேலும் தெரிவித்தார்:
“புகாருக்குள்ளான இரண்டு மருத்துவமனைகளிலும் கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தவறான சான்றிதழ்களை வழங்கியதும், சட்ட நுணுக்கங்களை தவறாக பயன்படுத்தியதும் விசாரணையில் வெளிச்சமிட்டுள்ளது. விசாரணைக்காக ஐஏஎஸ் அதிகாரி வினித் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.”

“புகாருக்குள்ளான மருத்துவமனைகளின் உரிமங்கள் பாரபட்சமின்றி ரத்து செய்யப்பட்டுள்ளன. சிறுநீரக மாற்று சிகிச்சைக்கான அனுமதி சான்றிதழ்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தொடர்பான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட உள்ளது. உடல் உறுப்புகளை விற்பனை செய்வது குறித்த விழிப்புணர்வும் பரவலாக ஏற்படுத்தப்படும்,” என அவர் தெரிவித்தார்.

இந்த அறிவிப்புடன், கிட்னி திருட்டு விவகாரம் தொடர்பாக அரசு தீவிர நடவடிக்கைக்கு தயாராக இருப்பதாக தெளிவாக கூறப்பட்டுள்ளது.