பொள்ளாச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, உடுமலைப்பேட்டையில் ரோந்து பணியில் ஈடுபட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து வேதனையை வெளிப்படுத்தினார். காவல்துறையினரின் உயிருக்கு பாதுகாப்பில்லை என அவர் கூறினார். சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் ரூ.30 லட்சம் நிவாரணம் வழங்கியதை அவர் வரவேற்றாலும், இது போதாது என்றார்.
அண்ணாமலை கூறியதாவது, காவல் நிலையங்களில் காலிப்பணியிடங்களை நிரப்பி, சப் இன்ஸ்பெக்டர், துணை போலீஸ் சூப்பிரண்ட் நியமனம் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும். இரவு ரோந்து செல்லும் போலீசாருக்கு பாதுகாப்பான உபகரணங்கள், பேட்ரோல் வாகனங்கள், பாடி கேமரா, பேசர்கள் போன்ற வசதிகள் வழங்கப்பட வேண்டும். போலீசாரின் பணிச்சுமையை குறைக்கும் வகையில் புதிதாக காவல் நிலையங்களை அமைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும், தமிழகத்தில் சட்ட ஒழுங்கு நிலைமை குறித்து அண்ணாமலை கவலை தெரிவித்தார். சராயம், கஞ்சா மற்றும் போதைப்பொருள் பழக்கங்கள் குறித்தும் தீவிர நடவடிக்கை தேவை எனக் கூறினார். டாஸ்மாக் வழியாக மது விற்பனை அதிகரிப்பது மற்றும் போதைப்பொருட்கள் ஏழை மக்களுக்கு அடிப்படையில் பாதிப்பை ஏற்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இத்தகைய சூழ்நிலையில், அரசும் மக்களும் போலீசாரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு உள்ளது என அண்ணாமலை கேட்டுக்கொண்டார். பாதுகாப்பு இல்லாமல் பணி செய்யும் காவலர்களின் உயிரை பாதுகாக்கும் வகையில் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.



Leave a Reply