காமராஜர் குறித்து அவதூறு பேச்சு: நாடார் மகாஜன சங்கத்தினர் காவல் ஆணையரிடம் மனு

Spread the love
பெருந்தலைவர் காமராஜர் குறித்து அவதூறாக பேசியதாக குற்றம்சாட்டி, சம்பந்தப்பட்ட யூடியூபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை மாநகர் மாவட்ட நாடார் மகாஜன சங்கத்தினர் காவல் ஆணையரிடம் மனு அளித்தனர்.

கோவை மாநகர் மாவட்ட நாடார் மகாஜன சங்க தலைவர் ராஜூ என்ற கருணா மூர்த்தி, மாவட்ட செயலாளர் டி.சி. விஜயகுமார் ஆகியோர் தலைமையில் சங்க நிர்வாகிகள், கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் துணை காவல் ஆணையர் திவ்யாவிடம் அளித்த மனுவில், ஒரு யூடியூபர் பெருந்தலைவர் காமராஜரின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளதாகவும், அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதாகவும் தெரிவித்தனர்.

இதன் காரணமாக பொதுமக்களிடையே தவறான கருத்துகள் உருவாகும் அபாயம் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர்கள், சம்பந்தப்பட்ட யூடியூபர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அந்த யூடியூப் சேனலைத் தடை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இந்த நிகழ்வின்போது சங்கத்தின் வக்கீல் அணி தலைவர் சுந்தரபாலன், பொதுச்செயலாளர் எம். சரவணன், லட்சுமி ஸ்டீல் கார்த்தீசன், சாந்தகுமார், தெற்கு மாவட்ட தலைவர் ஏ. வேலாயுதம் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பாலாஜி, தங்கபெருமாள், அந்தோணி செல்வவினோத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.