கள்ளச்சாராய உயிரிழப்பு : முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் உண்மை நிலை அறிய சிபிஐ விசாரணை : முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

admk protest
Spread the love

கள்ளச்சாராய உயிரிழப்பிற்கு தார்மீக பொறுப்பேற்று ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தி பேசினார்.
தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய கையாலாகாத விடியா தி மு க அரசை கண்டித்தும், கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தியதால் அப்பாவி மக்கள் பலர் பலியான சம்பவத்திற்கு தார்மீக பொறுப்பேற்று, சட்ட ஒழுங்கை பாதுகாக்க தவறிய முதல்வர் மு.க.ஸ்டாலினை உடனடியாக பதவி விலக வலியுறுத்தியும், கோவை புறநகர் தெற்கு, கோவை புறநகர் வடக்கு, கோவை மாநகர் மாவட்ட கழகங்கள் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்பி.வேலுமணி தலைமையில் கோவை செஞ்சிலுவை சங்கம் அருகே நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் கே.அர்ச்சுணன், செ.தாமோதரன், ஏ.கே.செல்வராஜ், ஒன்றிய கழக செயலாளர் விபி.கந்தசாமி, டி.கே.அமுல் கந்தசாமி, கேஆர். ஜெயராம், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சாந்திமதி தோப்பு அசோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியது:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏழை எளிய, தாழ்த்தப்பட்ட அப்பாவி மக்கள் பலர் கள்ளச்சாராயத்திற்கு பலியாகி உள்ளனர்.
சிபிஐ விசாரணை வேண்டும் என்று பொதுச் செயலாளர் எடப்பாடியார் அவர்கள் சட்டமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுத்தார். ஆனால் அவருக்கு பேசக்கூட வாய்ப்பு தரவில்லை.
அண்ணா திமுக சார்பில் இன்று நடத்தப்படும் போராட்டம் மிக முக்கியமான போராட்டம். நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பிறகு நடக்கும் முதல் போராட்டம்.
அப்பாவி மக்கள் விஷ சாராயம் குடித்து பலியானதற்கு நியாயம் கேட்கும் போராட்டம். கணவனை இழந்த பெண்களுக்காகவும், தந்தையை இழந்த குழந்தைகளுக்காகவும் நடக்கும் இந்த போராட்டம்.
இச்சம்பவம் எதனால் நடந்தது என்பதை பார்க்க வேண்டும். கள்ளச்சாராயம் மட்டுமல்ல திமுக ஆட்சியின்போது தொடர்ந்து கஞ்சா, போதை பொருட்கள் புழக்கம் அதிகரித்து வருகிறது.
‌ஆகவேதான் சட்டமன்றத்தில் நடைபெற்ற காவல்துறை மானிய கோரிக்கையின் போது எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இரண்டரை மணி நேரம் பேசினார். அப்போது சட்ட ஒழுங்கு சீர்கேடு , போதை பொருள் புழக்கம் குறித்தெல்லாம் எடுத்துரைத்தார்.
கள்ளக்குறிச்சி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் கள்ளச்சாராயம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அங்குள்ள காவல்துறை எஸ்.பி.க்கு கடிதம் கொடுத்துள்ளார். நேரடியாக சொல்லியுள்ளார். இது எல்லாம் இருந்தும் கூட கள்ளக்குறிச்சி சம்பவத்தால் ஏற்பட்ட சாவை தடுக்க திமுக தவறிவிட்டது.
கள்ளச்சாராயத்தால் பலர் உயிரிழந்த சம்பவம் ஏற்பட்ட கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதி அருகே காவல்துறை, நீதிமன்றம், அரசு அலுவலகங்கள் உள்ளது. அங்கேதான் இச்சம்பவம் நடந்துள்ளது. இதற்கு யார் காரணம்.
இச்சம்பவத்தை அடுத்து எஸ்பி-யை சஸ்பெண்ட் செய்துள்ளனர். மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் அதிகாரிகளை மாற்றம் செய்துள்ளனர். இப்பிரச்சனைக்கு அதிகாரிகள் மட்டும்தான் பலிகடாவா?
தமிழகத்தில் தொடர்ந்து போதைப் பொருள்கள் அதிகமாக பயன்பாட்டில் உள்ளது. அரசியல்வாதிகள் ஒத்துழைப்போடு நடக்கும் இந்த செயலால் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் .
கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு எஸ்பி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து விட்டதாக அரசு தெரிவிக்கின்றது. இதற்கு பின்னால் இருப்பவர்கள் யார் என்பதை கொண்டு வர வேண்டும்.
மெத்தனால் போன்ற மூலப்பொருட்கள் எல்லாம் எங்கிருந்து வந்தது. சாராயம் காய்ச்சுவதற்கு மெத்தனால் உள்ளிட்ட பொருள்கள் ஆந்திராவில் இருந்து கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. மாநிலங்கள் சம்பந்தப்பட்டிருப்பதாலும், தமிழகத்தில் இதற்கு பின் இருக்கும் அரசியல் சக்திகள் யார் என்பதை அறியவும் சிபிஐ விசாரணை கேட்கிறோம்.
சிபிஐ விசாரணை செய்யும் போது தான் உண்மை நிலை தெரிய வரும். முதல்வர் உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
கழக ஆட்சி காலத்தில் பல்வேறு பிரச்சனைகளுக்கு சிபிஐ விசாரணையை எடப்பாடியார் முதல்வராக இருந்தபோது பரிந்துரை செய்துள்ளார். எங்கள் மடியில் கனமில்லை. ஆகவே நாங்கள் சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்தோம்.
ஆகவே கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயத்திற்கு பலர் பலியான சம்பவத்திற்கு சிபிஐ விசாரணைக்கு உடனே உத்தரவிட வேண்டும். இந்த சம்பவம் இனிமேல் தொடரக்கூடாது.
காவல்துறை மட்டும் மீது நடவடிக்கை எடுக்காமல் யார் இதற்கு காரணமானவர்கள் என்று கண்டுபிடிக்க வேண்டும். கிட்டத்தட்ட 58 பேருக்கு மேல் இறந்துள்ளனர் என்று சொன்னார்கள். இத்தனை பேர் கொத்துக் கொத்தாக இறந்து விட்டார்கள்.
மனிதாபிமான அடிப்படையிலே பலியானவர்களின் குடும்பத்துக்கு இன்னும் நிறைய உதவி செய்ய வேண்டும்.‌
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கள்ளச்சாராய சம்பவத்தால் பலியானவர்களின் குழந்தைகளுக்கு தேவையான உதவிகளை செய்ய உத்தரவிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூற முதன் முதலாக நேரடியாக சென்றவர் எடப்பாடியார். அதுமட்டுமல்லாமல் விஷ சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகளுக்கு படிப்பு செலவினை ஏற்றுள்ளார்.
இச்சம்பவத்தில் அரசு உடனே செவி சாய்த்து நடவடிக்கை எடுத்திருந்தால் இன்று 60 உயிர்கள் பலியாகாமல் தடுத்திருக்கலாம்.
கள்ளச்சாராய சம்பவத்தில் பலியான அப்பாவி மக்களின் குடும்பத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும். இதில் தொடர்புடைய உண்மை குற்றவாளிகள் உடனடியாக கைது செய்ய வேண்டும்.
கழக ஆட்சி காலத்தில் தமிழகம் அமைதியாகவும், இது போன்ற போதை பொருட்கள புழக்கத்தை கட்டுபடுத்தியும் வைத்திருந்தோம்.
தற்போது சட்டம் ஒழுங்கு முற்றிலும் கெட்டுவிட்டது. அதற்கு தார்மீக பொறுப்பேற்று ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஓகே. சின்னராஜ், எட்டிமடை ஏ.சண்முகம், கஸ்தூரிவாசு, கே.எஸ்.துரைமுருகன், மற்றும் நிர்வாகிகள் தோப்பு க. அசோகன், சிங்கை ஜி இராமச்சந்திரன், கார்த்திக் அப்புசாமி, லோகேஷ் தமிழ்ச்செல்வன், வி. கிருஷ்ணகுமார், பிரபாகரன், காட்டூர் செல்வராஜ், புரட்சித்தம்பி, பார்த்திபன், தளபதி செந்தில், மணிமேகலை, கோட்டை ஹக்கீம், அசோக் குமார் உள்பட 5000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.