கறி குழம்புக்கு மவுசு போய் விட்டதா? தீபாவளி பிரியாணி விற்பனை மதிப்பு 250 கோடியாம்

Spread the love

புரட்டாசி மாதம் முடிவு, தீபாவளி கறி விருந்து உள்ளிட்ட காரணங்களால், வரும் தீபாவளிக்கு பிரியாணி சாப்பிட, உணவகங்களில் பலரும் முன்பதிவு செய்து வருகின்றனர். இதனால், தமிழகத்தில் தீபாவளி பிரியாணி விற்பனை மதிப்பு, 250 கோடி ரூபாயை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் கிராமம் முதல் நகரம் வரை, பாரம்பரிய அசைவ உணவாக, சாதம், ஆட்டுக்கறி குழம்பு இருந்தது. குறிப்பாக, தீபாவளிக்கு வீடுகளில் காலையில் இட்லி, ஆட்டுக்கறி குழம்பு, மதியம் சாதம் ஆட்டுக்கறி குழம்பு, ஆட்டுக்கறி சுக்கா என, அசைவ விருந்து சாப்பிடுவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக, சென்னையில் முதன்மையான அசைவ உணவாக பிரியாணி மாறியுள்ளது. தற்போது, சென்னை, கோவை போன்ற நகரங்கள் மட்டுமின்றி, தமிழகம் முழுதும் பிரியாணியை விரும்பி சாப்பிட தொடங்கிள்ளனர்.

பாசுமதி அரிசி மட்டன், சிக்கன் பிரியாணி, சீரக சம்பா அரிசி பிரியாணி களைகட்டுகிறது குறிப்பாக சீரக சம்பா அரிசி பிரியாணியில், ஆம்பூர், திண்டுக்கல், கொங்கு என, பல வகையான பிரியாணி விற்கப்படுகிறது. மக்கள் தங்களுக்கு பிடித்த பிரியாணியை விரும்பி வாங்குகின்றனர். வீடுகளில் சமைத்தால், பிரியாணி சுவை தெரிவதில்லை என்பதால், அசைவ உணவகங்களில் சாப்பிடுகின்றனர்.

மேலும், ஒரு கிலோ, 2 கிலோ என, குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, ‘ஆர்டர்’ கொடுத்து வாங்கி, வீட்டில் சாப்பிடுகின்றனர். சென்னையில் மட்டும் ஆண்டுக்கு சராசரியாக, 5,500 கோடி ரூபாய், தமிழகம் முழுதும், 11,000 கோடி ரூபாய்க்கு பிரியாணி வியாபாரம் நடக்கிறது. தற்போது தீபாவளிக்கு பிரியாணி வாங்க உணவகங்களில் முன்பதிவு செய்ய தொடங்கியுள்ளனர். இதனால், வரும் சனி, ஞாயிறு, திங்கள் என மூன்று நாட்கள் தீபாவளி பிரியாணி விற்பனை, 250 கோடி ரூபாயாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.