பாலிவுட்டின் பிரபல பின்னணிப் பாடகர் குமார் சானு மீது அவரது முன்னாள் மனைவி ரிதா பட்டாச்சார்யா அதிர்ச்சி குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
1986-ஆம் ஆண்டு திருமணம் ஆன இருவரும், சில ஆண்டுகள் கழித்து விவாகரத்து செய்தனர். இதுகுறித்து ஃபில்ம் விண்டோ இணையதளத்திற்கு அளித்த பேட்டியில் ரிதா கூறியதாவது:
“குமார் சானு ஒரு சிறந்த பாடகர். ஆனால், மனிதராக அவரைப் பற்றி பேசவே விரும்பவில்லை. அவருக்கு எந்த லட்சியமும் இல்லை. அவரை நல்ல பாடகராக உருவாக்கியது நான்தான். ஆரம்பத்தில் நம்மிடம் ஒன்றும் இல்லை. தரையில்தான் தூங்குவோம். ஒரே ஒரு லுங்கிதான் அவரிடம் இருந்தது.
1990-ஆம் ஆண்டு வெளியான ஆஷிகி படப்பாடல்கள் அவரை உச்சத்துக்கு கொண்டு சென்றது. அதன்பிறகு அவர் குணத்தில் மாற்றம் ஏற்பட்டது. நான் இரண்டாவது மகனுடன் கர்ப்பமாக இருந்தபோது, என் தந்தை மறைந்தார். அப்போது குமார் சானுவின் கொடுமைகள் அதிகரித்தன. அதே நேரத்தில் அவர் என்னை விவாகரத்து செய்ய நீதிமன்றம் சென்றார்.
என்னை வீட்டில் இருந்து வெளியேற்றிவிட்டார். நடிகை குனிகா சதானந்துடன் உறவில் இருந்ததை அவர் மறைக்கவில்லை. மேலும் பல தொடர்புகள் இருந்தன. நான் கர்ப்பமாக இருந்தபோது கூட உணவு தராமல் வைத்தார். வீட்டை விட்டு வெளியே செல்ல கூட அனுமதிக்க மாட்டார். கிச்சனை பூட்டி விட்டு செல்வார். குழந்தைகளையும் பார்த்துக்கொள்ளவில்லை. பால் வாங்கிக் கொடுத்ததில்லை. மருத்துவ செலவுகளையும் ஏற்கவில்லை. அவரை ஒரு நல்ல மனிதர் என்று சொல்ல முடியாது,” என ரிதா குற்றம்சாட்டினார்.
குமார் சானு – ரிதா தம்பதிக்கு ஜிகோ, ஜிசா, ஜேன் என்ற மூன்று மகன்கள் உள்ளனர். 1994-ஆம் ஆண்டு இவர்களுக்கு விவாகரத்து ஏற்பட்டது. அப்போது ஜேன் குமார் சானு ரிதாவின் கருவில் இருந்தார். விவாகரத்துக்குக் காரணமாக நடிகை குனிகா சதானந்த் இருந்ததாகவும், ஆனால் குனிகாவை திருமணம் செய்யாமல் பிரிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
பின்னர், 2001-ஆம் ஆண்டு சலோனி பட்டாச்சார்யாவை குமார் சானு மணந்தார். இத்தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



Leave a Reply