கரூர் தவெக விவகாரம் குறித்து தற்போது கேள்விகள் வேண்டாம்: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி

Spread the love
கரூர் தமிழக வெற்றி கழக கூட்ட நெரிசல் விவகாரம் குறித்து தற்போது எந்த கேள்விகளும் வேண்டாம் என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

திமுக கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளராக புதிதாக நியமிக்கப்பட்ட செந்தமிழ்ச் செல்வன் பொறுப்பேற்பு நிகழ்ச்சி காந்திபுரம் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் படங்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, பொங்கலூர் பழனிச்சாமி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செந்தில் பாலாஜி, “செந்தமிழ்ச் செல்வன் தனது பொறுப்பை முறையாக ஏற்கிறார். 2026ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் எங்கள் வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கட்சியின் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன,” என்றார்.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “அது குறித்து ஏற்கனவே விரிவாக பேசியுள்ளேன். தற்போது விசாரணை ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. விசாரணை முடிந்த பிறகே அதைப் பற்றி பேசுவது சரியாக இருக்கும். எனவே, இப்போது அதுகுறித்த கேள்விகளை தவிர்க்கலாம்,” எனக் கூறினார்.

அந்த சம்பவம் தொடர்பாக புதிய வீடியோக்கள் வெளியாகி வருவது குறித்து, “எந்தெந்த வீடியோக்கள் வெளியாகினாலும் அவை அனைத்தும் விசாரணை ஆணையத்தால் பரிசீலிக்கப்படும்,” என்றார்.

சிலர் தமிழக அரசு இதனை அரசியல் நோக்கில் பயன்படுத்துவதாக கூறுவதற்கான பதிலாக, “அரசு சார்பில் ஏற்கனவே தேவையான விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன. கரூரில் நடந்த நிகழ்வுகள் குறித்து நானும் முழுமையான தகவல்களை தெரிவித்துள்ளேன். விசாரணை அறிக்கை வெளியான பிறகு அதனைப் பார்த்து நாம் பேசுவோம்,” என்று விளக்கமளித்தார்.

செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது: “அரசை விமர்சிக்கும் கேள்விகள் கேட்கப்படுகின்றன, ஆனால் மறுபக்கத்தில் கேட்க வேண்டிய கேள்விகள் கேட்கப்படவில்லை. ஏன் ஏழு மணி நேரம் தாமதமாக வந்தார்கள்? ஏன் 500 மீட்டர் தூரத்தில் வாகனத்திற்குள் சென்றார்கள்? ஏன் 12 மணிக்கு என அறிவித்த நிகழ்ச்சி ஏழு மணிக்கு துவங்கியது? டிசம்பரில் நடத்த வேண்டிய பிரசாரம் ஏன் முன்கூட்டியே நடந்தது? — இவற்றையும் கேட்க வேண்டியது அவசியம்,” என்றார்.

“கரூர் விவகாரம் குறித்து இப்போது மேலும் பேச விரும்பவில்லை. விசாரணை முடிந்து இறுதி அறிக்கை வந்த பிறகு மீண்டும் பதிலளிக்கிறேன்,” என்று கூறி அவர் பத்திரிகையாளர்களிடம் உரையாடலை முடித்தார்.