கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: தவெக மீது சென்னை உயர்நீதிமன்றத்தின் கடும் கண்டனம்

விஜய்
Spread the love

கரூர் மாவட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவத்துக்கான வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்க உத்தரவிட்டுள்ளது.

தினேஷ் என்பவர், அரசியல் கட்சிகளின் ரோடு ஷோ மற்றும் பிரசார நிகழ்ச்சிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கக் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி செந்தில் குமார், தவெக தலைமைத்துவத்தையும், பொறுப்பின்மையையும் கடுமையாக விமர்சித்தார்.

“குழந்தைகள், பெண்கள் உயிரிழந்த துயர நேரத்திலும் தவெக வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. தலைவருக்கும், ஏற்பாட்டாளர்களுக்கும் சமூகப் பொறுப்பே இல்லை. நிகழ்ச்சி மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு. சம்பவ இடத்தில் மக்கள் உயிரிழந்தபோது தலைவரும், தொண்டர்களும் தப்பிச் சென்றனர். இது தலைமைத்துவ பண்பே இல்லை என்பதை காட்டுகிறது,” என நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.

மேலும், காவல்துறையின் செயல்பாட்டையும் நீதிபதி கடுமையாக விமர்சித்தார். “சம்பவம் தொடர்பாக 2 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். தவெக தலைவர் விஜய்யின் வாகனத்தால் விபத்து ஏற்பட்டது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்படவில்லையா? புகார் இல்லாவிட்டாலும் போலீசார் வழக்குப் பதிவு செய்ய வேண்டியது அவசியம். விஜயின் வாகனத்தை பறிமுதல் செய்திருக்கலாம்,” என நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

சம்பவ விசாரணைக்காக ஐஜி அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான ஆவணங்களை உடனடியாக குழுவிடம் ஒப்படைக்க கரூர் போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

விசாரணையின் நிறைவாக, ரோடு ஷோ மற்றும் கூட்டத் தொடர்பான விதிகளை வகுக்க வேண்டும் என நீதிமன்றம் வலியுறுத்தி வழக்கை முடித்தது.