கரூர் கூட்ட நெரிசல் குறித்து செந்தில் பாலாஜி விளக்கம் – “தவறை மறைக்க ஸ்டாலின் மீது விஜய் அவதூறு பரப்புகிறார்”

Spread the love

கரூரில் நடைபெற்ற கூட்ட நெரிசல் விபத்தில் பலர் உயிரிழந்த துயரச் சம்பவம் குறித்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கமளித்துள்ளார்.

அவர் அளித்த பேட்டியில்,
“கரூரில் நடந்த இந்த கூட்ட நெரிசல் மிகுந்த கொடூரமானது. கடந்த 29 வருட பொது வாழ்வில் இதுபோன்ற துயரச் சம்பவம் நான் பார்த்ததே இல்லை. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். கடந்த மூன்று நாட்களாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்து, தேவையான உதவிகளை செய்து வருகிறோம். முதல்வர், துணை முதல்வர் உடனடியாக வந்து ஆறுதல் தெரிவித்தமைக்கு நன்றியும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இத்துயரச் சம்பவம் அரசியலாக்கப்படக் கூடாது. இனி இத்தகைய விபத்துகள் எங்கும் நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்.

“விபத்துக்கு விஜய்யின் நடவடிக்கையே காரணம்”

அவர் மேலும் கூறியதாவது:
“விஜய்யின் வாகனம் காவல்துறை அறிவுறுத்தலை புறக்கணித்தே கூட்ட நெரிசலுக்குள் வந்தது. ஏற்கனவே அதிகமான மக்கள் இருந்த நிலையில், மேலும் ஆயிரக்கணக்கானவர்களை அழைத்து வந்ததால் நெரிசல் கட்டுக்கட்டாகி விபத்துக்கு வழிவகுத்தது. கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பொறுப்பை அவர் ஏற்கவில்லை. காவல்துறையின் உத்தரவை யாரும் பின்பற்றவில்லை.

விஜய் ஜன்னலை மூடிக்கொண்டு சென்றதால், அவரை காண மக்கள் பரப்புரை மேடைக்கு விரைந்தனர். அவர் முன்பே கைகாட்டியிருந்தாலோ, வாகனத்தின் மீது ஏறி பேசியிருந்தாலோ விபத்தை தவிர்த்திருக்கலாம்.”

செருப்பு வீச்சு விவகாரம்

“சிலர் என்னை பற்றி பேசியதால் செருப்பு வீசப்பட்டதாக கூறுகிறார்கள். ஆனால், உண்மையில் செருப்பு வீச்சு சம்பவம் நடந்தது 6வது நிமிடத்தில், விஜய் என்னை பற்றி பேசியது 16வது நிமிடத்தில். அவரின் கவனத்தை ஈர்க்க யாரோ செருப்பு வீசியிருக்கலாம்” என விளக்கமளித்தார்.

“நான் மக்களை விட்டு செல்ல மாட்டேன்”

“விபத்து நடந்த உடனே இரவு 7.47 மணிக்கு அமராவதி மருத்துவமனைக்கு சென்றேன். அதிமுக மாவட்டச் செயலாளர் கூட அதற்கு பிறகு வந்தார். சிலர் போல நான் சென்னைக்கு சென்றிருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். ஆனால், என் மக்களை விட்டு எப்போது செல்ல மாட்டேன்,” என்றார்.

“கட்டுப்பாடற்ற கூட்டம் தான், கட்டுக்கடங்காத கூட்டம் அல்ல”

“விஜய்யின் கூட்டம் கட்டுப்பாடற்றதாகவே இருந்தது. குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை. சம்பவத்துக்குப் பிறகு ஆயிரக்கணக்கான செருப்புகள் அங்கு சிதறி கிடந்தன, ஆனால் ஒரு தண்ணீர் பாட்டிலும் கிடைக்கவில்லை.

விஜய் நேரம் பின்பற்றி வந்திருந்தால் விபத்து தவிர்த்திருக்கலாம். கூட்டம் நடைபெறும் இடத்தை காரணம் காட்டி அவதூறு பரப்புவது தவறு. தன் மீது உள்ள தவறை மறைக்க, முதல்வர் ஸ்டாலின் மீது விஜய் அவதூறு பரப்புகிறார்,” என செந்தில் பாலாஜி குற்றஞ்சாட்டினார்.