தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக காவிரி ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால், காவிரி கரையோர பகுதிகளில் வெள்ள அபாயம் நிலவுகிறது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி தற்போது தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவடைந்துள்ளது. இது தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், தமிழக கடலோர பகுதிகளுக்கு அருகில் நீடித்து வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் வட தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
கோவை, நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது அதன் முழு கொள்ளளவான 120 அடியாக இருப்பதால், அணையில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் வினாடிக்கு 45,000 கனஅடி அளவிற்கு திறந்து விடப்பட்ட நீர், பின்னர் வினாடிக்கு 60,000 கனஅடி வரை அதிகரிக்கப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் காவிரி கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்களின் உயிர் மற்றும் உடைமைகளை பாதுகாப்பதற்காக தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.



Leave a Reply