, ,

கண்ணீரில் கருணாபுரம் : தேவை இரும்புக்கரம்

கருணாபுரம்
Spread the love
மது அருந்துதல் சங்க இலக்கிய காலம், மன்னர் ஆட்சி காலம் என தொன்று தொட்டு இருந்து வரும் பழக்கம்.
உற்சாகத்திற்காக அருந்துவது மகிழ்ச்சியை அளிக்கும்.
ஆனால் அளவுக்கு அதிகமாகவும் கள்ளச்சாராயமாகவும் இருந்தால் அது பெரும் அதிர்ச்சி தரும் சம்பவங்களையும் ஏற்படுத்திவிடும்.
தமிழகத்தில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழக்கும் சம்பவம்  அவ்வப்போது நிகழ்ந்து கொண்டே தான் இருக்கிறது. இதனால் சமுதாயத்திலும், அரசுக்கும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நிகழ்ந்த துயர சம்பவம், தமிழகத்தில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.  அனைவரையுமே பகள்ளக்குறிச்சி நகராட்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்த 150-க்கும் மேற்பட்டவர்களுக்கு வயிற்றுப்போக்கு, கண் பார்வை இழப்பு, செவித்திறன் பாதிப்பு  அனைத்து பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை, சேலம் அரசு மருத்துவமனை ,விழுப்புரம் அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல இடங்களில் கள்ளச்சாராயம் அருந்தியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒவ்வொரு நபருக்கும் இரண்டு மருத்துவர்கள் வீதம் உயர் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
என்றாலும் இவர்களில் 30-க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
50க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளது, பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இறந்தவர்களில் நான்கு பேர் பெண்கள், ஒரு திருநங்கை ஆவார்.
 கருணாபுரத்தில் இறந்தவர்களின் வீடுகள் அருகருகே இருப்பதால்,வரிசையாக சடனத்தை  வைத்து  இறுதி சடங்குகள் செய்ததையும்,உறவினர்கள் கதறி அழுததையும் கண்டு அனைவருமே கண்ணீர் விட்டு அழும் நிலைக்கு ஆளாக்கப்பட்டனர் .
பழைய மாரியம்மன் கோவில் தெருவில், 10-க்கும் மேற்பட்ட சடலங்கள் வீடுகளுக்கு முன் வைக்கப்பட்டிருப்பதை கண்ட பலரும் கண் கலங்கினர்.
சோகத்தில் மூழ்கிய உறவினர்களாலும்  கருணாபுரம் கிராமம் முழுவதும், மரண ஓலம் ஓயாமல் கேட்டது.
அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், எ.வ வேலு, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா,தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்  உள்ளிட்ட தலைவர்கள் இறந்தவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி உறவினர்களுக்கு ஆறுதலும் கூறினர். மேலும், மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளவர்களையும் பார்த்தனர்.
கள்ளச்சாராயம் சப்ளை செய்த கோவிந்தராஜ் ,அவர் மனைவி விஜயா,  தாமோதரன் உள்ளிட்ட 15 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கள்ள சாராய வழக்கு விசாரணையை
சி. பி. சி .ஐ. டி. போலீஸ் துவக்கி உள்ளனர்.
கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்ச ரூபாய், சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய்  அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட ஏழாவது வார்டு கருணாபுரத்தை சேர்ந்த 3 பேர் கடந்த 17-ம் தேதி திங்கட்கிழமை கள்ளச்சாராயம் குடித்துள்ளனர்.
குடித்த சில மணி நேரங்களிலேயே, வயிற்றுப்போக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர்கள் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
ஆனால் அங்கு இறந்து விட்டனர்.
இந்நிலையில் 19-ம் தேதி பகல் கருணாபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த கள்ளச்சாராயம் அருந்திய பலரும் அதிக வயிற்றுப்போக்கு, கை கால் மரத்து போதல் போன்ற பிரச்சனைகளால் கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர தொடங்கினர்.
  மூன்று பேர் மட்டுமே இருந்த தகவல், மாவட்ட கலெக்டருக்கு தெரியவே, மூன்று பேரின் மரணத்திற்கு கள்ளச்சாராயம் காரணம் அல்ல என தெரிவித்திருந்தார்.
இதனால் கள்ளச்சாராயம் குடித்தவர்கள், மருத்துவமனைக்கு செல்லாமல் இருந்ததால்  அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
கலெக்டர் உண்மையை மூடி மறைக்க பேட்டி  அளித்ததால், பல குடும்பங்கள் இப்பொழுது அனாதையாக உள்ளன. அவர் பேசாமல் இருந்திருந்தால் ஏராளமான உயிர்கள் பலி போகாமல்  இருந்திருக்கும் என அப்பகுதி மக்கள் கண்ணீருடன் கூறியுள்ளனர்.
கருணாபுரம் பகுதியில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் பழங்குடியினர் மற்றும்  பட்டியல் இனத்த வகுப்பை சேர்ந்தவர்கள்.
இவர்களில், பலரும், அங்குள்ள சந்தையில் மூட்டை தூக்குதல் உள்ளிட்ட  கூலி வேலை செய்து வருபவர்கள்.
இப்பகுதியில் 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் கிடைப்பதாக கூறும் அப்பகுதி மக்கள், ஆட்டோ இருசக்கர வாகனங்கள் என பலவற்றிலும் வீட்டிற்கு வந்து பாக்கெட்டுகளில் கள்ள சாராயம் கொடுத்து விட்டு செல்லும் பழக்கம் உண்டு.
ஆண் பெண் என வித்தியாசம் இல்லாமல் கள்ள சாராயம் வாங்கி அருந்துகின்றனர்.
இதனால்தான் இறந்தவர்களில் ஐந்து பேர் பெண்கள் ஆவார்.
டாஸ்மார்க் கடைகளில் குடிப்பதற்கு ரூ. 150 க்கு மேல் தேவைப்படும்.
ஆனால் இவர்களுக்கு வெறும் ஐம்பது ரூபாய் பாக்கெட்டில் கள்ளச்சாராயம் கிடைக்கிறது.
கள்ளச்சாராயம் விற்பனை செய்யும் இடத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் காவல் நிலையம் உள்ளது.
அங்கு இது குறித்து புகார் கொடுத்தாலும், காவல்துறையினர் ஏற்பதில்லை என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறும் போது, கள்ளக்குறிச்சியின் மையப் பகுதியில், காவல் நிலையம், நீதிமன்றம், கலெக்டர் மற்றும் எஸ் பி அலுவலகம் உள்ள பகுதியிலேயே கள்ளச்சாராயம் விற்பனை ஜோராக நடந்துள்ளது .இந்த சம்பவத்திற்குப் பின்னணியில் ஆளுங்கட்சி  கும்பல் உள்ளது.
தமிழகம் போதைப் பொருள் நிறைந்த மாநிலமாக திகழ்ந்து வருகிறது. கள்ளச்சாராயம் ஆறு போல் ஓடுகிறது.
நிர்வாகத் திறமையற்ற முதல்வர் ஸ்டாலின் தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை கூறும் போது, பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்திற்கு பின், தமிழகத்தில் குறைந்தபட்சம் ஆயிரம் மதுக்கடைகளை மூட வேண்டும். அமைச்சர் முத்துசாமி பதவி விலக வேண்டும். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் வழங்கப்படும் என்றார்.
பாமக தலைவர் ராமதாஸ்  அறிக்கையில், கள்ளச்சாராயத்திற்கும் திமுகவிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. இச்சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் உடனடியாக பதவி விலக வேண்டும்.
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா கூறுகையில்,போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவோம் என்ற முதல்வரின் பேச்சு, என்னாச்சு?
அதிகாரிகளை மாற்றினால், எல்லாம் மாறிவிடுமா என கேள்வி எழுப்பி உள்ளார்.
2001-ம் ஆண்டு பண்ருட்டியில் கள்ளச்சாராயம் குடித்த 53 பேர் பலியாயினர். 200 அதிகமானோருக்கு கண் பார்வை பறிபோனது.
அதே ஆண்டு ரெட்ஹில்ஸ் அருகே கோட்டூர் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த 30 பேர் பரிதாபமாக இறந்தனர்.
கடந்த ஆண்டு விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் செங்கல்பட்டு பகுதியில் 30 மேற்பட்டோர் கள்ளச்சாராயம் குடித்து இறந்த சோக சம்பவங்களும் இதற்கு முன்பு நிகழ்ந்துள்ளது.
அதிமுக ஆட்சியின் போது, மதுவிலக்கை அமல்படுத்த ஓங்கி ஒலித்த நடிகர்கள் சத்யராஜ், சூர்யா, கார்த்தி ,
விஜய் சேதுபதி சித்தார்த்,கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு உடனடியாக எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.இந்தப் பாரபட்சமான நடிகர்களை, பொதுமக்கள் புறக்கணிக்க வேண்டும் என்ற குரல்களும் அதிகரித்து வருகிறது.
மதுவிலக்கு கோரி, நாட்டுப்புற பாடல்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்திய திருச்சி சார்ந்த கோவன் குரல் என்னானது என பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர்.
கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி  சட்டசபையில் பேச, முயற்சித்த போது,சபாநாயகர் அப்பாவதற்கு அனுமதி அளிக்கவில்லை.
இதனால் சபையில் அமளி ஏற்பட்டதை அடுத்து, அதிமுகவினர் வெளியேற்றப்பட்டு,ஒரு நாள் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.