கோவை ஒரே வீட்டில் இருந்தும் கணவன் இறந்த தகவலை ஐந்து நாட்களுக்கு பிறகு மனைவி தெரிந்து கொண்டு காவல் நிலையத்தில் புகாரளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
கோவை மாவட்டம் ஒண்டிப்புதூரை அடுத்த இருகூர் பகுதியைச் சேர்ந்தவர் நாகமாணிக்கம் (73). இவருக்கு ராஜசுலோசனா (64) மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். நாகமாணிக்கம் பெயின்டிங் வேலை செய்து வந்தார். கணவன் – மனைவி இடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தன.
இதனால் நாகமாணிக்கம், ராஜசுலோசனா கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பேச்சு வார்த்தையில் ஈடுபடாமல் இருந்துள்ளனர். ஒரே வீட்டின் தரைத்தளத்தில் ராஜசுலோசனாவும், முதல் தளத்தில் நாகமாணிக்கமும் வசித்து வந்தனர். நாகமாணிக்கம் ரத்தம் அழுத்தம், சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டிருந்தார். அதற்கான சிகிச்சை பெற்று வந்த நிலையில் யாருடனும் அதிகம் பேசாமல் இருந்துள்ளார். கடைசியாக நாகமாணிக்கம் தண்ணீர் எடுப்பதற்காக 2024 டிசம்பர் 29 ஆம் தேதி இரவு எட்டு மணிக்கு தரை தளத்துக்கு வந்துள்ளார். அப்போது ராஜசுலோசனா அவரைப் பார்த்துள்ளார். அன்றைய தினம் தண்ணீர் எடுத்துச் சென்றவர் அதன் பிறகு வெளியில் வராமல் இருந்துள்ளார். ஆனால் ஐந்து நாட்களாகியும் நாகமாணிக்கம் வெளியில் வரவில்லை என்பதால் ராஜசுலோசனா பயந்துள்ளார். சந்தேகத்தில் அவர் கடந்த 3 ஆம் தேதி இரவு முதல் தளம் சென்று பார்த்துள்ளார். கதவு அடைக்கப்பட்டிருந்தது. இதனால் ஜன்னல் வழியே சென்று பார்த்தபோது நாகமாணிக்கம் படுக்கையில் இருந்துள்ளார்.
அதே நேரத்தில் அவரின் உடல் சடலமாக அழுகிய நிலையில் இருந்துள்ளது. அதிர்ச்சியடைந்த சுலோசனா இதுகுறித்து தன் மகன் மற்றும் சகோதரர் ஆகியோருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தார். அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து கதவை உடைத்துப் பார்த்துள்ளனர். இதையடுத்து சிங்காநல்லூர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த சிங்காநல்லூர் போலீசார் நாகமாணிக்கத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக இஎஸ்ஐ அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை நிறைவடைந்த பிறகு நாகமாணிக்கத்தின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
Leave a Reply