கடல் கடந்து வெற்றி பெற்ற பெரும் மன்னர்: ராஜேந்திர சோழனின் கதை மீண்டும் உயிர்பெறும் கங்கை கொண்ட சோழபுரத்தில்!

Spread the love

ராஜராஜ சோழன் மறைவுக்குப் பிறகு, 1014ஆம் ஆண்டு அரியணை ஏறிய அவரது மகன் ராஜேந்திர சோழன், இந்திய வரலாற்றில் சிறப்பான படைமன்னராக பெயர் பெற்றார். வட இந்தியாவை மட்டுமின்றி கடல் கடந்தும் வெற்றிகளை குவித்து, தமிழ் பேரரசின் மகத்துவத்தை உலகளவில் எடுத்துச்சென்றவர் இவர்.

இலங்கை மீது போர் செய்து வென்று, அதைத் தன் ஆட்சிக்குள் கொண்டுவந்த முதல் தமிழ் மன்னனாக ராஜேந்திர சோழன் புகழ்பெற்றார். அதன்பிறகு, தென்னிந்திய மாநிலங்கள் முழுவதையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததோடு, வடக்கே கங்கை வரை சென்று வெற்றி பெற்றார். இதனையே நினைவுகூரும் வகையில், ‘கங்கை கொண்ட சோழபுரம்’ என்ற புதிய நகரம் அமைத்தார்.

இந்தோனேஷியா, சுமத்ரா உள்ளிட்ட தீவுகளில் கடற்கொள்ளையர்களை எதிர்த்து, கடல்வழி வணிகத்தை பாதுகாக்கும் பணியும் மேற்கொண்டார். இதனால் ‘கடாரம் கொண்டான்’ என்ற பட்டம் பெற்றார்.

தன் தந்தை தஞ்சையில் கட்டிய பிரகதீஸ்வரர் கோயிலைப் போலவே, அரியலூரில் பெரிய சிவாலயம் ஒன்றை கட்டி, ‘கங்கை கொண்ட சோழபுரம்’ எனப் பெயரிட்டார். இங்கு பெரிதாக லிங்கமும் நந்தியும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. சிவனுக்கு பிரகதீஸ்வரர், அம்மனுக்கு பெரியநாயகி எனப் பெயரிடப்பட்டன.

இந்நிலையில், தமிழக வரலாற்றின் முக்கியப் பகுதியாக விளங்கும் இக்கோயிலுக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தருகிறார். ராஜேந்திர சோழனின் சாதனைகளை இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்வதற்கான இந்த முயற்சி வரவேற்கத்தக்கதாகும்.