கோவை சிங்காநல்லூர் தொகுதியின் முன்னாள் திமுக எம்.எல்.ஏ நா. கார்த்தி மீண்டும் அதே தொகுதியில் தான் செய்த சாதனைகளை பட்டியலிட்டு சீட் கேட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில்,
‘ தந்தை பெரியார்,பேரறிஞர் அண்ணா அவர்களின் கொள்கை வழிநின்று, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஊட்டிய திராவிட உணர்வோடு, எனது பதின்ம வயதிலேயே கழகப் பணியைத் தொடங்கியவன் நான்.
திராவிட இயக்கத்தின் சுயமரியாதைச் சுடரொளி,திராவிடச் சூரியன் கழகத் தலைவர் மாண்புமிகு. தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி தலைமையில் பணியாற்றி வருகிறேன்.
திராவிட இயக்கத்தின் இளம் தலைவர்,கழக இளைஞரணிச் செயலாளர்,தமிழ்நாடு துணை முதலமைச்சர் மாண்புமிகு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வழியில் கழகப் பணி தொடர்கிறது.
பள்ளிப் பருவத்தில் 1981 ஆம் ஆண்டு சிங்காநல்லூர் உடையாம்பாளையத்தில் ஐயா க. அய்யாவு,கு.கிருஷ்ணன்,அண்ணன் உ. க. ராமசாமி, அண்ணன் நவமணி, காந்தாமணி,அ.திராவிடமணி,இரா.சேரலாதன் மற்றும் கழக உடன்பிறப்புகளோடு தேர்தலுக்கு முன் கூட்டியே சுவர்களில் இடம்பிடித்து,கழகத்தின் வெற்றிச் சின்னம் உதயசூரியன் சின்னத்தை,சுவர்களில் ஆயிரக்கணக்கில் பல வண்ணங்களில் நானே வரைந்து பணியாற்றி உள்ளேன்.
கழகப் பொதுக் கூட்டங்களுக்கு இரவு தொடங்கி,விடியற்காலை வரை,கழகப் பொதுக்கூட்ட சுவரொட்டிகளை,கழக முன்னோடிகளோடு சேர்ந்து நானும் சுவரொட்டிகளை ஒட்டி கழகப் பணியாற்றியது என்பது என் வாழ்நாள் பாக்கியமாக இன்றும் கருதுகிறேன்.
பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ள என் அப்பாவுடனும்,கழக முன்னோடிகளுடனும் மிதிவண்டியில் பல கிலோ மீட்டர் தூரம் பயணித்து சென்று கூட்டங்களை தரையில் அமர்ந்து கேட்டு, கழகத்தின் ஓர் கொள்கை பிடிப்பு மிக்க உணர்வாளனாக மாறினேன்.
1984-ஆம் ஆண்டு நான் வசித்து வந்த உடையாம்பாளையத்தில் “தூக்கு மேடைக்கும் அஞ்சா திமுக இளைஞர் அணி” என்ற மன்றத்தை கழக உடன்பிறப்புகளுடன் தொடங்கி,
தமிழினம் தமிழ் மொழியைக் காக்க தீவிரமாகப் பணியாற்றி வந்தேன்.
1986-ல் தேவ நாகரீக வடிவில் உள்ள இந்தி மொழி தான் ஆட்சி மொழி என்று வலியுறுத்தி சொல்லப்பட்ட சட்ட நகல் எரிப்பின் போது, எம்ஜிஆர் அவர்களின் ஆட்சியின் போது தலைவர், கலைஞர் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்ட போது, சிங்காநல்லூர் வெடிகுண்டு பொய் வழக்கில், 20 வயதிலேயே கைது செய்யப்பட்டு, 6 மாத கால சிறைவாசத்தையும் 15 நாட்கள் தனிமைச் சிறையையும் அனுபவித்தேன்.
என்னோடு கைது செய்யப்பட்டவர்கள் அண்ணன் பொள்ளாச்சி மா.உமாபதி, அண்ணன் செ.தம்புராஜ்,மா.நவமணி,காட்டூர் ராமமூர்த்தி,சிங்காநல்லூர் தங்கவேல்,கா.கோ.யோகநாதன்.அன்று விலங்கு பூட்டிய கைகளோடு நான் சிறைக்குச் சென்ற தியாகத்தை, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்,
“சிங்கள ஜெயவர்த்தனா சிரித்து மகிழ்வார்
என “‘முரசொலி நாளிதழில்”
பாராட்டி எழுதியது
என் வாழ்நாள் முழுமைக்குமான உத்வேகமாக அமைந்தது.
1994 ஆம் ஆண்டு பிப்ரவரி 25 அன்று சிங்காநல்லூரில் தலைவர் கலைஞர் தலைமையில், எனக்கும் எனது மனைவி இளஞ்செல்விக்கும் திருமணம் நடைபெற்றது, எனது வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வாக அமைந்தது.
கழகம் எனக்கு வழங்கிய கோவை மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர், இளைஞரணி அமைப்பாளர், மாநகராட்சி துணை மேயர்,பகுதி செயலாளர், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட கழகச் செயலாளர் போன்ற பொறுப்புகளை வெறும் பதவிகளாகப் பார்க்காமல், மக்களுக்கான சேவையாகவே கருதினேன்.
துணை மேயராக இருந்த காலத்தில் கோவையின் பசுமைப் போர்வையை விரிவுபடுத்த,பீளமேடு அண்ணாநகர் உள்ளிட்ட பல்வேறு சாலைகளில்,10,000-க்கும் மேற்பட்ட மரங்களை நட்டு, அவற்றை இன்றும் ஒரு தவமாகப் பராமரித்து வருகிறேன்.
2007-ல் நான் தொடங்கிய “தளபதி இரத்ததான இயக்கம்” மூலம் கடந்த 17 ஆண்டுகளில் சுமார் 18,000-க்கும் மேற்பட்ட ஏழை எளிய நோயாளிகளுக்கு உயிர் காக்கும் இரத்தத்தை தடையின்றி வழங்கியதில் பெரும் மனநிறைவு கொள்கிறேன்.
ஒவ்வொரு ஆண்டும் “தளபதி இரத்த தான இயக்கத்திற்கு கோவை மாவட்ட ஆட்சியர் அவர்களால்,பாராட்டுச் சான்றிதழ்களும்,நினைவுப் பரிசும் வழங்கப்பட்டுள்ளது.கடந்த 2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில்,” பாராட்டுச் சான்றும்,நினைவுப் பரிசும் “தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மாண்புமிகு. மா.சுப்பிரமணியம் அவர்களால் வழங்கப்பட்டது.
கடந்த அதிமுக ஆட்சியில்,40 க்கும் மேற்பட்ட பொய் வழக்குகள் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக என் மேல் போடப்பட்டது.
கொரோனா பேரிடர் காலத்தில் அதிமுக அரசு இயந்திரம் முடங்கிக் கிடந்தபோது, நம் கழகத் தலைவர் அவர்களின் ‘”ஒன்றிணைவோம் வா’” திட்டத்தின் கீழ், சிங்காநல்லூர் தொகுதி முழுவதும் உள்ள பொதுமக்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசிய உதவிகளை நேரடியாக வழங்கினேன்.
முத்தமிழறிஞர் கலைஞர், கழகத் தலைவர் மாண்புமிகு.தமிழ்நாடு முதலமைச்சர் அன்புத் தளபதி,இளம் தலைவர் கழக இளைஞரணிச் செயலாளர், தமிழ்நாடு துணை முதலமைச்சர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பொது வாழ்வை ஒரு எல்லையற்ற அர்ப்பணிப்பாகக் கருதிச் செயல்படுவதைப் போலவே, நானும் எனது வாழ்நாளை முழுமையாக மக்கள் பணிக்கே அர்ப்பணித்து செயல்பட்டு வருகிறேன்.
அந்த வகையில், கழகத் தலைவர் அவர்களிடம்,மீண்டும் ஒரு முறை தொடர்ந்து மக்கள் பணியாற்றிட வாய்ப்புக் கோரி,
“சென்னை அண்ணா அறிவாலயத்தில்”,2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட எனது விருப்ப மனுவை வழங்கியுள்ளேன் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.



Leave a Reply