ஓடும் ரயிலில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: காவலர் பணியிடை நீக்கம்

Spread the love

சென்னையிலிருந்து கோவைக்கு வந்த இன்டர்சிட்டி ரயிலில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குற்றம்சாட்டப்பட்ட கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலைய காவலர் சேக் முகமத் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னையில் சட்டக் கல்லூரியில் பயிலும் கோவையைச் சேர்ந்த மாணவி, கடந்த சனிக்கிழமை இன்டர்சிட்டி ரயிலில் பயணம் செய்தபோது, அருகில் அமர்ந்திருந்த காவலர் சேக் முகமத் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. சம்பவம் காட்பாடி அருகே நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிர்ச்சியடைந்த மாணவி தனது செல்போனில் வீடியோ பதிவு செய்து, ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் அளித்தார். இதையடுத்து, அரக்கோணம் ரயில் நிலையத்தில் காவலர் ரயிலிலிருந்து இறக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குற்றச்சாட்டின் அடிப்படையில் சேக் முகமத் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.