பசும்பொனில் நடைபெறும் முத்துராமலிங்கத் தேவரின் 118வது ஜெயந்தி மற்றும் 63வது குருபூஜை விழாவில் கலந்து கொள்வதற்காக, முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) மற்றும் முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் ஆகியோர் ஒரே காரில் பசும்பொன் சென்றது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் இருந்து பசும்பொன் நோக்கி புறப்பட்ட இரு தலைவர்களும் ஒரே வாகனத்தில் பயணித்தது, அதிமுகவின் தற்போதைய நிலைமையில் “ஒற்றுமை சாத்தியமா?” என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
சமீபத்தில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என்று கட்சித் தலைமைக்கு 10 நாள் கெடு விதித்திருந்தார். இதனால் கட்சிக்குள் பரபரப்பு நிலவிய நிலையில், பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செங்கோட்டையனை கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். பின்னர், செங்கோட்டையனும் டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை தனியாகச் சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக அமைந்தது.
இந்நிலையில், பசும்பொனுக்குச் செல்லும் வழியில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் செங்கோட்டையன் ஒரே காரில் பயணம் செய்திருப்பது, அதிமுக ஒற்றுமைக்கு புதிய அடையாளமாக பார்க்கப்படுகிறது.
அரசியல் வட்டாரங்களில், இது “ஓபிஎஸ்-செங்கோட்டையன் இணைப்பு – புதிய அரசியல் கூட்டணி ஆரம்பமா?” என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.



Leave a Reply