ஐந்து ஆண்டு திமுக ஆட்சியில் தமிழகம் ஐம்பது ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டது

Spread the love

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, திமுக ஆட்சியில் பட்டியல் சமூக மக்களுக்கெதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாகவும், ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் தமிழகம் 50 ஆண்டுகள் பின்னோக்கிப் போய்விட்டதாகவும் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் பட்டியல் சமூக மக்கள், முதியவர்கள், குழந்தைகள் ஆகியோருக்கு எதிரான குற்றங்கள் பெரிதும் அதிகரித்திருப்பதாக தேசிய குற்றப்பதிவுத் துறை (NCRB) அறிக்கை கூறுகிறது. 2023-ம் ஆண்டில் மட்டும் 201 முதியவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இது நாட்டிலேயே மிக அதிகமானது. மேலும், முதியவர்களுக்கு எதிராக 2,104 குற்றங்கள் பதிவாகியுள்ளன, இது நாடு முழுவதும் தமிழ்நாட்டை நான்காவது இடத்தில் நிறுத்துகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும், “2020-ஆம் ஆண்டில் பட்டியல் சமூக மக்களுக்கு எதிராக நடந்த குற்றங்களின் எண்ணிக்கை 1,294. ஆனால், 2023-ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் இது 1,921 ஆக உயர்ந்துள்ளது. திமுக ஆட்சியில் இந்தக் குற்றங்கள் சுமார் 50% அதிகரித்திருப்பதை இது காட்டுகிறது. குழந்தைகளுக்கெதிரான குற்றங்களும் அதிகரித்துள்ளன. இவை அனைத்தும் பதிவான குற்றங்களின் எண்ணிக்கை மட்டுமே” என்றார்.

அண்ணாமலை தனது அறிக்கையில், “தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு நிலைமை மோசமடைந்துள்ளது. எதிர்க்கட்சியினரை பழிவாங்கவும், கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்கவும் மட்டுமே முதல்வர் ஸ்டாலின் காவல்துறையை பயன்படுத்தி வருகிறார். காவல்துறை மற்றும் அரசு உயர் அதிகாரிகள் திமுக நிர்வாகிகளைப் போல செயல்படுகின்றனர். இதன் விளைவுதான், பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் மற்றும் பட்டியல் சமூக மக்களுக்கெதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன” என்று குற்றஞ்சாட்டினார்.

மேலும், “ஐந்து ஆண்டு திமுக ஆட்சியில் தமிழகம் ஐம்பது ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டது என்பதே உண்மை. இன்னும் ஆறு மாத காலமே உள்ளது. திமுக ஆட்சியின் அராஜகத்திற்கு தமிழக மக்கள் முடிவுரை எழுதுவார்கள்” என அண்ணாமலை எச்சரித்துள்ளார்.