சென்னை ஐஐடியில் உயர்கல்வி பயிலும் வாய்ப்பைப் பெற்றுள்ள சேலம் மாவட்ட மாணவி ராஜேஸ்வரியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து பாராட்டினார். அவரது சாதனையை கௌரவமாக நினைத்து, ரூ.70,000 மதிப்பிலான மடிக்கணினியும், ரூ.5.73 லட்சம் மதிப்பிலான வீடும் வழங்கினார்.
சேலம் மாவட்டம் கல்ராயன்மலையின் கருமந்துறையைச் சேர்ந்த பழங்குடியின மாணவி ராஜேஸ்வரி, அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளியில் பயின்றார். கடந்த ஜே.இ.இ. தேர்வில் அகில இந்திய அளவில் 417வது இடம் பிடித்து, சென்னை ஐஐடியில் ஏரோஸ்பேஸ் இஞ்சினியரிங் படிக்க தகுதி பெற்றுள்ளார்.
சிறுவயதிலிருந்தே கல்வியில் ஆர்வம் கொண்ட ராஜேஸ்வரி, 10ம் வகுப்பில் 438 மதிப்பெண்கள் மற்றும் 12ம் வகுப்பில் 600-க்கு 521 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். அவரது தந்தை கடந்த 2023-ம் ஆண்டு உடல்நலக் குறைபாட்டால் இறந்த நிலையில், தாயாரும் சகோதரர்களுடன் மலைப்பகுதியில் வாழ்ந்து வருகின்றார்.
பள்ளி தலைமை ஆசிரியரின் ஊக்கத்துடன், பழங்குடியினர் நலத்துறையின் சிறப்பு வகுப்புகள் மற்றும் ஈரோடு பெருந்துறையில் உள்ள அரசு பயிற்சி மையத்தில் பயின்று, ஜே.இ.இ. தேர்வுக்கான தயாரிப்பில் ஈடுபட்டார். தற்போதும், குமிழி ஏகலைவா மாதிரி மேல்நிலைப்பள்ளியில் உயர்கல்வி பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
மாணவியின் இந்த சாதனையை முதல்வர் ஸ்டாலின் அறிந்ததும், அவர் உயர்கல்விச் செலவை தமிழ்நாடு அரசு ஏற்கும் என அறிவித்தார். மேலும், சேலம் மாவட்டத்திற்கு மேற்கொண்ட சுற்றுப் பயணத்தின் போது, ராஜேஸ்வரியை நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து பாராட்டினார்.
இதே நேரத்தில், பழங்குடியினர் நலத்துறையின் தொல்குடித் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீடு செய்து அதற்கான ஆணையையும் வழங்கினார். இதனுடன், உயர்கல்வி பயணத்திற்கு உதவியாக மடிக்கணினியும் வழங்கினார்.
இந்த விழாவில் பேசிய ராஜேஸ்வரி, “இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றும் கனவுடன், தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்க விரும்புகிறேன். தந்தையை இழந்த எனக்கு, முதல்வர் ஸ்டாலின் ஒரு தந்தையாக உறுதுணையாக இருந்தது மிகவும் பெருமிதமான அனுபவம்,” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.



Leave a Reply