என்னையும், கோவையையும் பிரிக்க முடியாது – கோவையில் இளையராஜா பேட்டி

Spread the love

இசைஞானி இளையராஜாவுக்கு ரோட்டரி கிளப்பின் உயரிய ‘தொழில் சிறப்பு விருது’ கோவையில் வழங்கப்பட்டது. அவினாசி சாலையில் அமைந்துள்ள ஒரு தனியார் ஹோட்டலில் நடைபெற்ற இந்த விழாவில், இசைஞானிக்கு ரசிகர்கள் பூங்கொத்து, ஓவியங்கள் வழங்கி அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு ஆவலுடன் வரவேற்றனர்.

விழாவில் உரையாற்றிய இளையராஜா, “நான் பேச்சாளர் அல்ல, ஒரு பட்டாளி. பட்டாளி என்றால் பாடுபவன். அவன் செய்யும் பாடுகள், வேலைப்பாடுகள் தான் அவனை பட்டாளியாக ஆக்குகின்றன. அந்த பட்டாளிகளில் நானும் ஒருவர். ஆனால் என் பாடுகள், பிறரின் பாடுகளை விட வேறுபட்டவை. என் பாடுகள் தான் பாட்டுகளாக மாறுகின்றன” என்றார்.

கோவையின் மேல் கொண்டுள்ள தனித்துவமான பாசத்தை பகிர்ந்த இசைஞானி, “கோவையில் என் காலடி படாத தெரு இல்லை. ஒவ்வொரு வட்டமும், வீதியும் எனது ஆர்மோனியம் ஒலிக்காத இடமே இல்லை. என் ஆர்மோனியம் பெட்டி கோவையில் செய்தது. என் அண்ணன் வாங்கி வந்த அந்த ஆர்மோனியம் தான் இன்றும் என் கம்போசர்களுக்குப் பயன்படுகிறது,” என்று உருக்கமாக கூறினார்.

தொடர்ந்து, “எனக்கும் கோவைக்கும் நெருங்கிய உறவல்ல, அது ஒரு உயிர் தொடர்பு. என்னையும் கோவையையும் பிரிக்க முடியாது,” என்று கூறி ரசிகர்களின் மனதை கலங்கச் செய்தார்.