‘எந்திரன்’ திரைப்படத்தின் காப்புரிமை தொடர்பாக இயக்குநர் ஷங்கரின் ரூ.10.11 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எந்திரன் படத்துக்காக இயக்குனர் ஷங்கர் பெற்ற பணத்திற்கு சமமான சொத்துக்களைதான் தற்போது அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.
ஒருவேளை இந்த வழக்கில் இயக்குனர் ஷங்கர் குற்றவாளி என உறுதியானால் அவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. திரைப்படத் திருட்டு அல்லது காப்புரிமை மீறல் என்கிற அடிப்படையில், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படுவது இதுவே முதல் முறை என்று அமலாக்கத்து அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இயக்குனர் சங்கரின் மூன்று அசையா சொத்துக்களை பறிமுதல் செய்துள்ளதாக, கடந்த பிப்ரவரி 17 ஆம் தேதி பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒரு தற்காலிக உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக அமலாக்கத்துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இயக்குநர் ஷங்கர் தனக்கு ஆதரவாக உயர்நீதிமன்றத்தின் தெளிவான தீர்ப்பை மேற்கோள் காட்டி, இந்த குற்றச்சாட்டை நிராகரித்தார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமலாக்கத்துறை அதிகாரிகள் தங்கள் நடவடிக்கைகளை மறுபரிசீலினை செய்ய வேண்டும். என் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் ஏற்கனவே உயர் நீதிமன்றத்தால் முழுமையாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பைப் புறக்கணித்து, எனது சொத்துக்களை முடக்கும் நடவடிக்கையை அமலாக்கத்துறை எடுத்துள்ளது.
எந்திரன் படக்கதையின் உரிமையாளராக அறிவிக்கக்கோரிய ஆரூர் தமிழ்நாடனின் மனுவை நீதிமன்றம் நிராகரித்தது. ஆதாரமற்ற ஒரு குற்றச்சாட்டின் அடிப்படையில் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. நீதிமன்ற தீர்ப்பை நம்பாமல் வெறும் புகார் அடிப்படையில் சொத்துக்களை முடக்கியுள்ளது அமலாக்கத்துறை. தங்கள் நடவடிக்கையை அமலாக்கத்துறை திரும்பப்பெறாவிட்டால், மேல்முறையீடு செய்யப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply