தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் ஏப்.19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இந்த சூழலில் பாஜக பிரச்சார பொதுக்கூட்டம் சேலம் கெஜல்நாயக்கன்பட்டியில் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசன், நடிகர்கள் சரத்குமார், குஷ்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பிரதமர் மோடி பேச துவங்கிய போது, “பாரத அன்னை வாழ்க. என் அருமை தமிழ் சகோதர சகோதரிகளே வணக்கம்… இம்முறை 400க்கும் மேல்” என்று தமிழில் பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், “பெண்களுக்கு பல பிரச்சனைகள் உள்ளன. நான் அவர்களுக்கு பாதுகாப்பு கேடயமாக இருக்கிறேன். அதற்கேற்ப பல திட்டங்களை கொண்டு வருகிறேன். இன்னும் பல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும். பெண் சக்தி தான் எனக்கு பாதுகாப்பு. பெண்கள் தான் தான் பாஜகவின் பாதுகாப்பு கவசமாக உள்ளனர். சுப்பிரமணிய பாரதியார் சக்தியைப் பெண் வடிவில் வழிபட்டவர். பாரத அன்னை என்று போற்றியவர். நானும் அவர் வழியிலேயே ஒரு சக்தி உபாசகனாக இருக்கிறேன். சக்தியின் தன்மையை அழிக்க நினைப்பவர்கள் அழிந்துபோன அடையாளங்கள் உள்ளன. இந்த தேர்தலில் தமிழகத்தில் இருந்து தான் அவர்களின் அழிவு தொடங்க உள்ளது.
தமிழகத்தின் வளர்ச்சிக்கு பல லட்சம் கோடியை அனுப்ப ஆர்வமாக இருக்கிறது பாஜக அரசு. ஆனால் இங்குள்ள அரசு அதனை கொள்ளையடிப்பதில் குறியாக உள்ளது. அரசியலில் நேர்மை என்றாலே காமராஜர் தான் என் நினைவுக்கு வருவார். அவர் எனது இன்ஸ்பிரேஷன்.
பாமகவின் வருகையால் தேசிய ஜனநாயக கூட்டணியின் கரம் வலுவடைந்துள்ளது; ராமதாஸின் அனுபவமும், அன்புமணியின் திறமையும் நமக்கு பலமாக அமையும். ஆனால் தமிழ்நாட்டின் வளர்ச்சியே தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முக்கிய நோக்கம். தமிழ்நாட்டில் பாஜகவுக்கும், எனக்கும் கிடைக்கும் ஆதரவை நாடே பார்த்துக்கொண்டிருக்கிறது; இதனால் திமுகவுக்கு தூக்கம் தொலைந்துவிட்டது. தமிழ்நாடு வளர்ச்சியடைய 400-க்கும் மேற்பட்ட இடங்களை வெல்ல வேண்டும்” என்று பிரதமர் மோடி பேசினார்.
.
Leave a Reply