கோவை புறநகர் தெற்கு மாவட்ட அம்மா பேரவையின் சார்பாக கோவை குனியமுத்தூர் பகுதியில் திமுக அரசின் அவலங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் மாபெரும் திண்ணை பிரச்சாரம் நடைபெற்றது. இந்த பிரச்சாரத்தில் தொழில் நிறுவனங்கள், கடைகள், மற்றும் வீடு, வீடாக சென்று பொதுமக்களை சந்தித்து திமுக அரசின் அவலங்களையும், அதிமுக அரசின் பொற்கால ஆட்சியின் திட்டங்கள் குறித்தும் பொதுமக்களிடம் விளக்கும் விதமாக துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
பிரச்சாரத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, நான்கு ஆண்டு காலமாக மக்களுக்கு எதுவுமே செய்யாத ஆட்சி நடைபெற்று வருகிறது. குறிப்பாக கோவை மாவட்டத்திற்கும், இந்த குனியமுத்தூர் பகுதிக்கும் இதுவரை ஏதாவது ஒரு திட்டம் கொண்டு வந்ததாக திமுகவினரால் சொல்ல முடியுமா என்று கேள்வி எழுப்பினார். மேலும் அதிமுக ஆட்சியின்போது சாலைகள், பாலங்கள், குடிநீர் திட்டங்கள், தடையில்லா மின்சாரம் உட்பட எண்ணற்ற திட்டங்களை மக்களுக்காக கொண்டு வந்ததாகவும் தற்பொழுது இருக்கும் திமுக அரசு மக்களுக்கு எதுவும் செய்யாமல் சொத்து வரி உயர்வு மின் கட்டண உயர்வு உள்ளிட்ட மக்கள் விரோத திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதிலும் அத்திக்கடவு அவினாசி திட்டம் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டு செயல்படுத்தப்பட்டது 70 ஆண்டு கால பிரச்சனையை எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு நிறைவேற்றி காட்டியது.
மேலும் இந்த பகுதிகளில் அதிமுக ஆட்சியில் தடையற்ற குடிநீர் விநியோகம் நடைபெற்றது. இன்று அதிகமான தண்ணீர் கையிருப்பு இருந்தும் திறமையான நிர்வாகம் இல்லாததால் முறையான குடிநீர் விநியோகம் செய்ய முடியாமல் இந்த அரசு தவிக்கிறது. மேலும் திமுக அரசு மக்களுக்கு எதையுமே செய்யாத அரசு. அதுபோல் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்து வருகிறது. எனவே தமிழகத்திற்கு மீண்டும் அண்ணன் எடப்பாடியார் முதல்வராக பதவியேற்கும் காலமே விடிவு காலமாக அமையும், மேலும் 2026 சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெற்று மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் என்று உறுதிபட தெரிவித்ததுடன் கோவை மாவட்டத்தை புறக்கணிக்கும் திமுகவை நாமும் புறக்கணிப்போம் என்று தெரிவித்தார்.
உடன் மாவட்ட இணைச் செயலாளர் எஸ்.மணிமேகலை, அம்மா பேரவை மாவட்ட செயலாளர் எஸ் விஜயகுமார், பகுதி செயலாளர் தி. மதனகோபால், நடிகர் வையாபுரி மற்றும் கட்சியினர் பலர் பங்கேற்றனர்.



Leave a Reply