உலக குளுக்கோமா வாரம்: தி ஐ ஃபவுண்டேஷன் மருத்துவமனையில் இலவச கண் பரிசோதனை

Spread the love

தி ஐ ஃபவுண்டேஷன் கண் மருத்துவமனையில் உலக குளுக்கோமா வாரம் மார்ச் 8 முதல் 14, 2026 வரை அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இலவச கண் பரிசோதனை முகாம்கள் மற்றும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
தென்னிந்தியாவில் 27 கிளைகளுடன் கடந்த 46 ஆண்டுகளாக கண் மருத்துவ சேவையை வழங்கி வரும் தி ஐ ஃபவுண்டேஷன் மருத்துவமனை, குளு க்கோமா நோய் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. உலகளவில் குளுக்கோமா நோய்குறித்து விழிப்பு ணர்வை அதிகரிக்க உலக குளுக்கோமா சங்கம் முன்னெடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த வாரம் அனுசரிக்கப்படுகிறது.
ஆய்வுகளின்படி இந்தியாவில் 3 முதல் 5 சதவீதம் பேர் குளுக்கோமா நோய் ஏற்படும் அபாயத்தில் உள்ளனர். அதில் சுமார் 90 சதவீதம் பேர் தங்களுக்கு இந்த நோய் இருப்பதை அறியாமலேயே வாழ்ந்து வருகின்றனர். உலகளவில் சுமார் 76 மில்லியன் மக்கள் குளுக்கோமா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்தியாவில் மட்டும் 40 வயதுக்கு மேற்பட்ட சுமார் 1.2 கோடி பேர் இந்த நோயால் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக குளுக்கோமா வாரத்தை முன்னிட்டு தி ஐ ஃபவுண்டேஷன் மருத்துவமனையின் அனைத்து கிளைகளிலும் மார்ச் 8 முதல் 14 வரை குளுக்கோமா நோயாளிகளுக்கு இலவச கண் பரிசோதனை வழங்கப்படுகிறது. மேலும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் நோயாளிகளுக்கு 10 சதவீத கட்டண சலுகையும் வழங்கப்படுகிறது.
தி ஐ ஃபவுண்டேஷன் கண் மருத்துவமனையின் மருத்துவ இயக்குநரும் குளுக்கோமா பிரிவு ஆலோசகருமான டாக்டர் சித்ரா ராமமூர்த்தி, டாக்டர் ஆர். முரளிதர், டாக்டர் ஐமன் அகமது கான் மற்றும் டாக்டர் நிரஞ்சனா பாலசுப்ரமணியம் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து குளுக்கோமா நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதுகுறித்து மருத்துவ இயக்குநர் டாக்டர் சித்ரா ராமமூர்த்தி தெரிவித்ததாவது: “குளுக்கோமா என்பது எந்த அறிகுறியும் தெரியாமல் மெதுவாக கண்பார்வையை பாதிக்கும் நோய். எனவே 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் கட்டாயமாக வருடத்திற்கு ஒருமுறை கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடியும்,” என்றார்.
இந்த விழிப்புணர்வு மற்றும் இலவச பரிசோதனை நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் பங்கேற்று பயனடையுமாறு தி ஐ ஃபவுண்டேஷன் கண் மருத்துவமனை அழைப்பு விடுத்துள்ளது.