உலகின் சிறந்த பிரட்களில் தமிழ்நாட்டின் பரோட்டாவுக்கு  6ம் இடம்

Spread the love

தென்னிந்திய உணவுகளில் பரோட்டாவிற்கு தனி இடம் உண்டு. பிரியாணிக்கு அடுத்ததாக பரோட்டாவிற்கே அதிகமான ரசிகர்கள் உள்ளனர். சுவையில் தனித்துவம் கொண்ட இந்த உணவு, இப்போது உலகளவில் புகழ்பெற்ற ஒன்றாக மாறியுள்ளது.

உலக புகழ்பெற்ற உணவு மற்றும் பயண வழிகாட்டி ‘டேஸ்ட் அட்லஸ்’ வெளியிட்ட உலகின் சிறந்த 50 ரோட்டேர் உணவுகளில், தமிழ்நாட்டின் பரோட்டா 6வது இடம் பிடித்துள்ளது. உணவின் தரமும், சுவையின் தனித்துவமும் அடிப்படையாக வைத்து இந்த தரவரிசை வெளியிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டேஸ்ட் அட்லஸ் அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் உலகின் சிறந்த உள்ளூர் மற்றும் ரோட்டேர் உணவுகளை ஆய்வு செய்து, அவற்றின் தரம், சுவை, மக்களிடையே உள்ள வரவேற்பு போன்ற அம்சங்களை கருத்தில் கொண்டு பட்டியலை வெளியிட்டு வருகிறது. 2025 ஆம் ஆண்டிற்கான பட்டியலில் இந்திய உணவுகள் பலவும் இடம்பிடித்துள்ளன, அதில் தமிழ்நாட்டின் பரோட்டாவும் குறிப்பிடத்தக்கதாக உள்ளது.

தமிழ்நாட்டில் பரோட்டா என்பது வெறும் உணவல்ல, அது ஒரு கலாச்சாரத்தின் அங்கமாக மாறியுள்ளது. தமிழர் உணவுப் பாரம்பரியத்தில் பரோட்டா முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. மென்மையாகவும், மொறு மொறுப்பாகவும் பல்வேறு விதங்களில் பரோட்டா தயாரிக்கப்படுகிறது. ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவாக இது வளர்ந்து வந்துள்ளது.

இதன் சிறப்பு என்னவெனில், பரோட்டா சைவ, அசைவ பிரியர்களுக்கும் ஏற்றாற்போல் பல்வேறு வகைகளில் தயாரிக்கப்படுகிறது. மேலும் ஒவ்வொரு ஊரிலும், பரோட்டாவிற்கு தனித்துவமான சைட் டிஷ்கள் வழங்கப்படுகின்றன. இதுவே தமிழ்நாட்டின் பரோட்டாவை உலகளவில் பிரபலமான உணவாக உயர்த்தியுள்ளது.