உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் 12ஆம் ஆண்டு விழாவும், சிற்பி அவர்களின் 90ஆம் அகவை விழாவும் டாக்டர் என்.ஜி.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் என்.ஜி.பி. கலை அரங்கில் நடைபெற்றது.
உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் தலைவர் மருத்துவர் நல்ல பழனிசாமி இந்நிகழ்விற்குத் தலைமை தாங்கி சிறப்புரை ஆற்றினார். அவர் பேசுகையில், இம்மையத்தைத் தொடங்கியதன் நோக்கம் தமிழ் மொழிக்கும் மண்ணுக்கும் இனத்திற்கும் சேவை புரிவதும், தமிழ் படைப்புலகிற்கு பங்களிக்கும் படைப்பாளிகளை விருதுகள் மூலம் ஊக்குவிப்பதும் எனக் குறிப்பிட்டார். மேலும், “எஞ்சோட்டுப் பெண்” எனும் நூலை எழுதிய விழாவின் சிறப்பு விருந்தினர் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் தமிழச்சி தங்கபாண்டியன் வருகையை “வரப்பிரசாதம்” எனப் புகழ்ந்து குறிப்பிட்டார்.
சிறப்பு விருந்தினராக தென்சென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் தமிழச்சி தங்கபாண்டியன் கலந்து கொண்டு, முனைவர் ப. மருதநாயகத்தின் “SIRPI: POET AS A SCULPTOR” என்ற ஆங்கில நூலையும், மருத்துவர் நா. செல்வராஜனின் “உயிர்காப்பும் இன்றியமையா முதலுதவி வழிமுறைகளும்” என்ற மருத்துவ நூலையும் வெளியிட்டு சிறப்பித்தார்.
அவர் பேசுகையில், தானும் மருத்துவர் நல்ல பழனிசாமி அவர்களாலும், இம்மையத்தினாலும் சிற்பி விருது வழங்கி ஊக்குவிக்கப்பட்டவர் என்றும், அந்த வழிகாட்டுதலே வட்டார வழக்கு மொழியில் தொடர்ந்து எழுதத் தூண்டியதாகவும் கூறினார். தன்னைப் போலும் அம்பையையும் போன்ற பெண் படைப்பாளிகள் சூர்ப்பணகையை கொண்டாடுபவர்கள் என அவர் குறிப்பிட்டார். ஆங்கில பேராசிரியராக இருந்தும், உலக அங்கீகாரம் பெற ஆங்கிலத்திலேயே எழுத வேண்டும் என பலர் அறிவுறுத்தியபோதும், தமிழை விடுத்து வரும் உலக அங்கீகாரம் அவசியமில்லை என அவர் வலியுறுத்தினார். இறுதியாக, “தமிழ் கேள்விகளை எழுப்பும் மொழியாக இருக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டார்.
இவ்விழாவிற்கு வருகை புரிந்தோருக்கு டாக்டர் என்.ஜி.பி. கல்விக்குழுமங்களின் இயக்குநர் மதுரா அருண் பழனிசாமி வரவேற்புரை வழங்கினார். முனைவர் ப. மருதநாயகம் தாம் எழுதிய நூல் குறித்து விளக்கி உரையாற்றினார். பத்மஸ்ரீ சிற்பி பாலசுப்ரமணியம் மகிழ்வுரையில், தமது 90ஆம் அகவையை கொண்டாடும் இந்நிகழ்வு “800 ஆண்டுகளுக்குப் பின்னும் என் கவிதையில் ஒரு வரியாக நான் வாழ்வேன்” என்ற நம்பிக்கையைத் தருவதாகக் குறிப்பிட்டார்.
முனைவர் ப. இரா. முத்துசாமி விருது பெறுபவர்களின் அறிமுக உரையை வழங்கினார். நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் தமிழச்சி தங்கபாண்டியன் விருதுகளை வழங்கி சிறப்பித்தார். உ.வே.சா. தமிழறிஞர் விருது முனைவர் க. இரத்தினத்திற்கும், பெரியசாமித்தூரன் படைப்பாளி விருது எழுத்தாளர் அம்பைக்கும், டாக்டர் நல்ல பழனிசாமி பிறதுறைத் தமிழ்த்தொண்டர் விருது டாக்டர் கு. கணேசனுக்கும் வழங்கப்பட்டது. மேலும், சிறப்பு விருதுகள் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன், முனைவர் அ. லோகமாதவி, முனைவர் கி. சிவா ஆகியோருக்கு வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் முனைவர். தெ. ஞானசுந்தரம் கலந்து கொண்டார்.
இயகோகா என். சுப்ரமணியம் நன்றியுரை வழங்கினார். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை டாக்டர் என்.ஜி.பி. கல்விக்குழுமங்களின் முதன்மை செயல் அலுவலர் முனைவர் ஓ.டி. புவனேஸ்வரன், இணை செயல் அலுவலர் முனைவர் மா. நடேசன் மற்றும் தமிழ்த்துறை பேராசிரியர்கள் சிறப்பாக மேற்கொண்டிருந்தனர்.
இந்நிகழ்வில் டாக்டர் என்.ஜி.பி. கல்விக்குழுமங்களின் கல்லூரி முதல்வர்கள், புல முதன்மையர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.



Leave a Reply