தமிழகத்தில் உரத்தட்டுப்பாடு கடுமையாக அதிகரித்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், காவிரி பாசன மாவட்டங்களிலும் கடலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் யூரியா, டி.ஏ.பி., பொட்டாஷ், காம்ப்ளெக்ஸ் போன்ற உரங்களின் கடுமையான பற்றாக்குறையால், உழவர்கள் தங்கள் பயிர்களுக்கு உரம் இட முடியாமல் கவலையில் உள்ளனர் என கூறியுள்ளார்.
வேளாண் கூட்டுறவு சங்கங்களின் வேலைநிறுத்தத்தால் உரங்கள் விநியோகிக்கப்படாததும், சில தனியார் கடைகளில் யூரியாவுடன் தேவையற்ற சத்து குருணையை கட்டாயமாக வாங்கச் செய்வதும் உழவர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஒரு மாநிலத்தில் உரத்தட்டுப்பாடு ஏற்பட்டால் அதை சரி செய்வது மாநில அரசின் கடமை என வலியுறுத்திய அவர், “ஆந்திரம், தெலுங்கானம் போன்ற மாநிலங்கள் உரத்தட்டுப்பாட்டை திறம்பட கையாள்ந்தன; ஆனால் தமிழக அரசு உறக்கத்தில் உள்ளது,” என கடுமையாக விமர்சித்தார்.
திமுக அரசு உடனடியாக விழித்து கொண்டு உரத்தட்டுப்பாட்டை போக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கூட்டுறவு சங்க வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, வேளாண்மை தொடக்க கூட்டுறவுகள் வழியாக உரங்களை வழங்க வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார்.



Leave a Reply