திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது தொடர்பான நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வலியுறுத்தி, இந்து முன்னணி மற்றும் இந்து மக்கள் கட்சி சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் அறிவிக்கப்பட்டன. ஆனால் காவல்துறையினர் அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வந்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அதன் ஒரு பகுதியாக கோவையிலும் இந்து முன்னணி மற்றும் இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்ட நிலையில், காந்தி பார்க் பகுதியில் திரண்ட இரு அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இந்து முன்னணி அமைப்பினரை காவல்துறையினர் அருகிலுள்ள தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.
இந்த நிலையில், தனியார் மண்டபத்தில் கைது நடவடிக்கை நடைபெறும்போது அங்கு வந்த உதவி காவல் ஆணையர் மகேஸ்வரன், இந்து முன்னணி பொறுப்பாளரான சதீஷை தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கழுத்துப் பகுதியில் தாக்கிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், சதீஷ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது வீடு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, உதவி காவல் ஆணையர் மகேஸ்வரன் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, இந்து முன்னணி அமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். காவல்துறையினரின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என்றும், சம்பந்தப்பட்ட அதிகாரியின்மீது உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.



Leave a Reply