லேசான தலைச்சுற்றல் காரணமாக கடந்த வாரம் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், சிகிச்சை பெறும் நிலையிலிருந்தே அரசு அலுவல் பணிகளை மீண்டும் தொடங்கி விட்டார். சுகாதார குழு மூன்று நாட்கள் ஓய்வு எடுக்க அறிவுறுத்தியிருந்தாலும், தன் பொறுப்பை புறக்கணிக்காமல் மருத்துவமனையிலிருந்தே செயல்படுவதால் பாராட்டுகள் எழுந்துள்ளன.
மருத்துவ பரிசோதனைகள் மற்றும் ஆஞ்சியோகிராம் சிகிச்சைக்குப் பிறகு ஓய்வில் இருந்த ஸ்டாலின், இன்று காலை தனது அலுவல் பணிகளை தொடங்கியுள்ளார். தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம் நேரில் மருத்துவமனைக்கு சென்று, முக்கிய ஆவணங்களை முதல்வரிடம் ஆலோசித்தார். அரசின் முக்கியத் திட்டங்கள், கோப்புகள் மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து, அவற்றில் சிலவற்றுக்கு முதல்வர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
இதற்கு முந்தைய நாட்களில், மருத்துவமனையில் இருந்தவாறே, ஜூலை 22 அன்று “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் தொடர்பாக ஆலோசனை நடத்தினார். பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 5.74 லட்சம் மனுக்களின் நிலை குறித்து விவாதித்து, விரைந்து தீர்வு காண நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.
அதேபோல், ஜூலை 23 அன்று கன்னியாகுமரி, காஞ்சிபுரம், மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாகக் கலந்துரையாடி, திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் பயனாளிகளின் பங்களிப்புகளை ஆய்வு செய்தார்.
அப்போலோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையின்படி, முதல்வரின் உடல்நிலை நிலைமை சாதாரணமாக இருப்பதோடு, விரைவில் முழுமையாக இயல்புநிலைக்குத் திரும்புவார் எனத் தெரிவிக்கப்பட்டது.
Leave a Reply