ஈஷா மையத்தில் சிவராத்திரி கொண்டாட்டம் : உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்பு

Spread the love

ஈஷா யோகா மையத்தில் பிப்ரவரி 26-ஆம் தேதி நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க உள்ளனர்.

இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு கோவை பிரஸ் கிளப்பில் நடைபெற்றது. இதில் ஈஷா அறக்கட்டளையின் மண்டல ஒருங்கிணைப்பாளர் சுவாமி பாரகா கலந்து கொண்டு பேசினார்.

சுவாமி பாரகா கூறுகையில் , “நம் பாரத ஆன்மீக மரபில் மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி நாள் மஹாசிவராத்திரி திருநாளாக கொண்டாடப்படுகிறது. நம் கலாச்சாரத்தில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக மஹாசிவராத்திரி நாளில் இரவு முழுவதும் விழிப்புடன் இருக்கும் வகையில் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் ஈஷாவில் 31-ஆவது மஹாசிவராத்திரி கொண்டாட்டங்கள் வரும் 26-ஆம் தேதி மிக பிரம்மாண்டமான அளவில் நடைபெற இருக்கிறது. இதில் சிறப்பு விருந்தினராக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே. சிவகுமார் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். ஈஷாவில் மஹாசிவராத்திரி விழா ஆதியோகி முன்பு 26-ஆம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 6 மணி வரை கொண்டாடப்பட உள்ளது.

சத்குரு முன்னிலையில் நடைபெறும் இவ்விழாவில் சக்திவாய்ந்த தியானங்கள், மந்திர உச்சாடனைகள், தலைசிறந்த கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகள் உட்பட பல்வேறு அம்சங்கள் இடம்பெற உள்ளன. நிகழ்ச்சியில் ‘மிராக்கிள் ஆப் தி மைண்ட்’எனும் இலவச செயலியை சத்குரு அறிமுகப்படுத்த உள்ளார். தினமும் 7 நிமிடங்கள் சத்குருவின் வழிக்காட்டுதலுடன் மக்கள் தியானம் செய்யும் வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் பங்கேற்கும் தமிழக மக்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் சிறப்பு தனி இருக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

விழாவில் கலந்து கொள்ளும் லட்சக்கணக்கான மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது. மஹாசிவராத்திரி விழா இந்தியா முழுவதிலும் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சி தமிழ், மலையாளம், ஓடியா, அசாமி, பெங்காலி உள்ளிட்ட 11 இந்திய மொழிகள் மற்றும் அரபிக், இத்தாலி, பிரெஞ்சு, ஜெர்மன் உள்ளிட்ட 11 அயல் மொழிகள் என மொத்தம் 22 மொழிகளில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

150-க்கும் அதிகமான தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் தளங்களிலும், இந்தியா முழுவதும் 100-க்கும் அதிகமான PVR-INOX திரையரங்குகளிலும், ஜியோ ஹாட்ஸ்டார், ZEE5 ஆகிய OTT தளங்கள் மற்றும் BIG 92.7, ஃபீவர் ஆகிய பண்பலை வானொலிகளிலும் விழா நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

நிகழ்ச்சியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல பாடகர் சத்ய பிரகாஷ், கர்நாடகாவை சேர்ந்த பாடகி சுபா ராகவேந்திரா, ‘பாரடாக்ஸ்’ என அழைக்கப்படும் தனிஷ் சிங், மராத்தி இசை சகோதரர்கள் அஜய் – அதுல், குஜராத் நாட்டுப்புற கலைஞர் முக்திதான் காத்வி மற்றும் இந்திய மொழிகளில் ஆன்மீகப் பாடல்களை பாடி சமூக ஊடகங்களில் வைரலான ஜெர்மன் பாடகி கசான்ட்ரா மே ஆகியோர் பங்கேற்கின்றனர். இவர்கள் நடத்தும் நிகழ்ச்சியில் மக்கள் இரவு முழுவதும் விழித்து இருந்து சிவராத்திரியை கொண்டாடுவார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.