, , , , ,

ஈஷா மகா சிவராத்திரி விழா – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்பு

Isha Mahashivaratri
Spread the love

கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

மாலை 6 மணி அளவில் ஈஷாவில் தொடங்கிய மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் அமித்ஷா தியானலிங்கத்தை தரிசனம் செய்தார். பின்னர் ஜக்கி வாசுதேவ் அவர்கள் தியானலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து தீபாராதனை செய்தார். பின்னர் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு ஜக்கி வாசுதேவ் அமைச்சர் அமித்ஷாவை காரில் அவரே ஓட்டி வந்தார். மேடையில் வைக்கப்பட்டிருந்த சிவலிங்கத்திற்கு மத்திய அமைச்சர் அமித்ஷா கைலாய தீர்த்தத்தால் அபிஷேகம் செய்தார். பின்னர் மகா கர்ம யக்னாவை ஏற்றி வைத்தார், இந்த நிகழ்வில் மிராக்கிள் ஆஃப் தி மைண்ட் என்ற இலவச தியான செயலியை சத்குரு வெளியிட்டார்

இந்த நிகழ்ச்சியில் பேசிய அமித்ஷா, “இன்று வாரணாசியில் மகா கும்பமேளா முடிவடைகிறது. இங்கு கோவையில் பக்தியின் கும்பமேளாவை என்னால் காண முடிகிறது.  மகா சிவராத்திரி என்பது பிரபஞ்சத்தின் அதிர்வுகளை உணரும் நாளாகும். சிவமும் ஜீவாத்மாவும் ஒன்றிணையும் நாளாகவும் மோட்சத்திற்கான நாளாகவும் இருப்பதே மகா சிவராத்திரி. சிவன் வழிபாட்டுக்கான கடவுள் மட்டுமல்ல அனைத்துக்கு மூலமானவர். மகா சிவராத்திரி பக்தியினுடைய வெளிபாடாகவும் தன்னையே சிவனுக்கு அற்பணிக்கும் விழாவாகவும் கொண்டாடப்படுகிறது.

சத்குரு உருவாக்கிய இந்த இடம் பக்திக்கான இடம் மட்டுமல்ல புனிதம், யோகம், ஆத்ம சாதனை, தன்னை உணர்தல் ஆகியவற்றுக்கான இடமாக விளங்குகிறது. ஈஷா யோக மையம் தியானம் மற்றும் யோகம் ஆகியவற்றால் சரியான பாதையில் நடந்து செல்ல வழிகாட்டுகிறது. சிவத்துவத்தை அடைவதே வாழ்க்கையின் முக்கிய நோக்கம் என்பது இங்கு வந்து தான் எனக்கு தெரிந்தது. ஈஷா யோக மையம் இளைஞர்கள் ஆன்மீகத்தை நெருங்க உதவி வருகிறது. சத்குரு இளைஞர்களையும் ஆன்மீகத்தையும் இணைக்கும் மகத்தான பணியாற்றி வருகிறார். இளைஞர்களுக்கு தர்மத்தினுடைய மேன்மைகளை போதித்து வருகிறார். மகாசிவராத்திரி பற்றி நான் நிறைய கேள்வி பட்டிருக்கிறேன். ஆனால் இங்கு வந்த பிறகு தான் எனக்கு தெரிந்தது இங்கு மகத்தான ஆற்றல் விழா நடைபெற்று வருகிறது என்று தெரிகிறது.” என்று பேசினார்.

இந்த விழாவில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி,  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஒடிசா மாநில ஆளுநர் ஹரிபாபு கம்பஹம்பதி, பஞ்சாப் மாநில ஆளுநர் குலாப் சந்த் கட்டாரியா, கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே. சிவகுமார், மத்திய சட்ட மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர் எல். முருகன்,   புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம், மகாராஷ்டிரா மண் மற்றும் நீர்ப்பாசனத் துறை அமைச்சர் சஞ்சய் ரதோட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பண்ணாரி குழுமத் தலைவர் பாலசுப்ரமணியன், சோழமண்டல குழுமத் தலைவர் வேலையன் சுப்பையா, அப்பல்லோ குழுமத்தை சேர்ந்த சங்கீதா ரெட்டி,  திரைத்துறையை சேர்ந்த நடிகர்கள் சந்தானம், தமன்னா, விஜய் வர்மா, திரைப்பட இயக்குனர் ஓம் பிரகாஷ் மெஹ்ரா உள்ளிட்டவர்களும், இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் பாய்ச்சங் பூட்டியா ஆகியோரும் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் இந்தியா மட்டுமின்றி வெளி நாடுகளை சேர்ந்த ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பாரடாக்ஸ், சுபா ராகவேந்திரா, சத்ய பிரகாஷ், முக்ததன் கட்வி, காஸ்மே உள்ளிட்ட பல்வேறு கலைஞர்கள் பங்கேற்றனர். இரவு முழுதும் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பக்தி பாடல்கள் நடைபெற்றது. அங்கு வந்துள்ள  அனைவருக்கும் மகா அன்னதானம் வழங்கப்பட்டது