நீதிமன்றங்களில் இ-ஃபைலிங் (மின்னணு வழக்கு தாக்கல்) முறையை அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவையில் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இ-ஃபைலிங் முறையில் பல்வேறு தொழில்நுட்ப மற்றும் நடைமுறை சிக்கல்கள் உள்ளதாகக் கூறி, அந்த முறையை கட்டாயமாக அமல்படுத்தக் கூடாது என வலியுறுத்தி, நாடு முழுவதும் பல மாநிலங்களில் வழக்கறிஞர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக இன்று கோவையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு தீர்மானத்தின் அடிப்படையில், கோவை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் பிரதான நுழைவுவாயில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கோவை வழக்கறிஞர்கள் சங்க தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். சங்க செயலாளர் சுதீஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, இ-ஃபைலிங் முறையில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டி முழக்கங்கள் எழுப்பினர். குறைபாடுகள் அனைத்தும் தீர்க்கப்படும் வரை கட்டாய இ-ஃபைலிங் முறையை திரும்ப பெற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
ஏற்கனவே, இ-ஃபைலிங் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 3 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை நான்கு நாட்கள் கோவையில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.



Leave a Reply