இந்து மதத்தை இழிவுபடுத்தவில்லை என சத்தியம் செய்ய முடியுமா? – நயினார் நாகேந்திரன் கேள்வி

Spread the love

தமிழக ஆளுநரை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தரக்குறைவாக விமர்சித்துள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் அவர் கூறியதாவது:
“தமிழக ஆளுநரை, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தரக்குறைவாக விமர்சித்துள்ளது கண்டிக்கத்தக்கது. தன் பதவிக்குரிய பொறுப்பை உணராமல், அரசியலமைப்புச் சட்டத்தின்படி நியமிக்கப்பட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி மீது அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்க உதயநிதிக்கு என்ன தகுதி இருக்கிறது?

திமுக மீது தமிழக மக்கள் கொண்டுள்ள கோபத்தை திசைதிருப்பும் நோக்கில் இந்தி திணிப்பு, மதவாதம் போன்றவற்றை கூறுகின்றனர். தேசிய கல்விக் கொள்கையில் இந்தி கட்டாயம் என எங்கும் குறிப்பிடப்படவில்லை. இந்து மதத்தை இழிவுபடுத்தவில்லை என உதயநிதி ஸ்டாலின் சத்தியம் செய்ய முடியுமா?” என நயினார் நாகேந்திரன் சவால் விட்டார்.

மேலும், “திமுகவின் நிர்வாக சீர்கேடுகள், ஊழல், போதைப் பொருள் பரவல் ஆகியவற்றுக்கு எதிராக தமிழகம் போராடி வருகிறது; விரைவில் அதில் வெற்றி பெறும். எனவே, ஆளுநரை விமர்சிக்காமல் வளர்ச்சித் திட்டங்களில் கவனம் செலுத்த வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.