கடந்த 21ம் தேதி தவெக மாநாடு நடந்த பாரபத்தியில் வெயில் கொளுத்தியது . அதிகாலையிலேயே தவெக மாநாட்டிற்கு வந்த தொண்டர்கள், மீண்டும் தங்களின் கார்கள், வேன்கள், பேருந்துகளுக்கு செல்ல தொடங்கினர். ஒரு சிலர் தங்களது இருக்கை பறிபோய்விடுமோ என்ற அச்சத்தில் வெயிலேயே காத்திருந்தனர். 11 மணியளவிலேயே வெயில் உச்சத்திற்கு வந்த நிலையில், 2 மணிக்கெல்லாம் தவெக தொண்டர்கள் பலரும் மயக்கம் போடத் தொடங்கினார்கள். ஒரு கட்டத்தில் எங்கு திரும்பினாலும் பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் மயக்கம் போட்டனர். அதேபோல் ஆம்புலன்ஸ் சத்தமும் மாநாட்டுத் திடல் அருகிலே கேட்டுக் கொண்டே இருந்தது. கடந்த 2 மாதங்களாக மதுரை விமான நிலையம் பகுதி தான் இந்தியாவிலேயே அதிக வெப்பமான பகுதி என்று தொடர்ச்சியாக அறிவிக்கப்பட்டு வந்தது. மாநாட்டுத் திடலோ மதுரை விமான நிலையத்தில் இருந்து வெறும் 6 கிமீ சுற்றளவில் இருக்கிறது. இதனை முன்பாகவே சிந்தித்து மாநாடு ஏற்பாடுகளின் போது மேற்கூரை அமைத்திருக்கலாம். மேற்கூரை அமைத்திருந்தாலே, பலரும் நிம்மதியாக மாநாட்டில் அமர்ந்திருப்பார்கள்.
கேரவனில் இருந்து நேராக மாநாட்டுத் திடலுக்கு வரும் விஜயிடம், நிர்வாகிகள் யாராவது இதனை சொல்லிப் புரிய வைத்திருக்கலாம். திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் மாநாடு பெரும்பாலும் மேற்கூரை அமைக்காமல் நடக்காது. அப்படி மேற்கூரை அமைக்காமல் நடத்தப்பட்டால், அந்த மாநாடு இரவு நேரத்தில் நடக்கும். இதனை தவெக மனதில் வைப்பது எதிர்காலத்தில் நல்லது.
Leave a Reply