ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை அமைச்சகம் நடத்திய சிறப்பு அழைப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று நாடு திரும்பிய பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவர் மற்றும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்தார்.
இந்த பயணம், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் அமைந்ததாக அவர் தெரிவித்தார். “ஆஸ்திரேலிய அரசின் அரசியல் கொள்கைகள், செயல் முறைகள், மகளிர் தலைமைத்துவம் மற்றும் பாலின சமத்துவம் குறித்த பல்வேறு கருத்துகளை பகிர்ந்தோம். பிரதமர் மோடியின் மகளிர் நலத் திட்டங்கள் குறித்து பேசியதில் பெருமை அடைகிறேன்,” என்றார்.
ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய மாணவர்களின் திறன் மேம்பாடு, இரு நாடுகளுக்கிடையிலான கல்வி, பாதுகாப்பு மற்றும் ராணுவ உறவுகள் ஆகியவையும் பயணத்தின் முக்கிய அம்சங்களாக இருந்ததாக கூறினார். மேலும், ஆஸ்திரேலியாவின் உயர் தூதரை கோவைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளதையும் அவர் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த வானதி சீனிவாசன், முதல்வர் முதன்முறையாக நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பது மாற்றத்தைக் காட்டுகிறது என குறிப்பிட்டார். “இந்த கூட்டம் மாநில நலனுக்கான முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் நிகழ்வாகும். மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு எந்த பாரபட்சமும் இன்றி நிதி ஒதுக்கியுள்ளது,” என்றார்.
கோவை மருதமலை அருகே ஏற்பட்ட காட்டு யானை உயிரிழப்பு சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த அவர், “யானைகள் உயிரிழப்பும், மனித-மிருக மோதல்களும் கோயம்புத்தூரில் தொடர்ந்து நிகழ்கின்றன. இது குறித்து சட்டமன்றத்தில் பலமுறை பேசப்பட்டுள்ளேன். வன எல்லை பகுதிகளில் பிளாஸ்டிக் வீசுவதை அரசு முற்றிலுமாக தடுக்க வேண்டும். இது போன்ற சம்பவங்களை தடுக்கும் விரிவான திட்டங்களை அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும்,” என வலியுறுத்தினார்.
Leave a Reply