ஆவணமின்றி கடத்தல்: வாளையார் அருகே 2.5 கிலோ வெள்ளி, ₹1.5 லட்சம் பறிமுதல் – இருவர் கைது

Spread the love

உரிய ஆவணங்கள் இன்றி ஹைதராபாத் வழியாக தமிழகம் மற்றும் கேரளாவிற்கு கடத்தப்பட இருந்த 2.5 கிலோ வெள்ளி மற்றும் ₹1.5 லட்சம் பணத்தை வாளையார் பகுதியில் போலீசார் பறிமுதல் செய்தனர். இதில் சம்பந்தப்பட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவை மாவட்டம் க.க.சாவடி காவல் நிலைய போலீசார் சேலம் – கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாளையார் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு இருசக்கர வாகனம் வழியாக கோவையில் இருந்து கேரளா நோக்கி பயணித்த இருவர் சந்தேகத்தின் பேரில் நிறுத்தப்பட்டனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில், அவர்களுடன் இருந்த பையில் வெள்ளி கட்டிகள் மற்றும் ₹1.5 லட்சம் ரொக்கம் இருப்பது தெரியவந்தது. அதற்கான உரிய ஆவணங்களை கேட்ட போது, அவர்கள் எதுவும் சமர்ப்பிக்க முடியவில்லை.

விசாரணையில், கைது செய்யப்பட்டவர்கள் திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த அஜயன் மற்றும் தெலுங்கானா மாநிலம் மகபூப் நகர் பகுதியைச் சேர்ந்த முகம்மது வலியுதீன் என அடையாளம் காணப்பட்டனர். முகமது வலியுதீன் ஹைதராபாத்தில் இருந்து பேருந்து மூலமாக ஆவணமின்றி வெள்ளியை கொண்டு வந்து, தமிழக-கேரள எல்லையான வாளையாரில் அஜயனிடம் ஒப்படைத்ததாக தெரியவந்தது.

இந்த வழி கடந்தும், சுங்க வரி தவிர்க்க, தங்கம் மற்றும் வெள்ளி கட்டிகள் பலமுறை இவ்விதம் கடத்தப்படுவதும் போலீசாரால் கண்டறியப்பட்டது.

இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார், 2.5 கிலோ வெள்ளி, ₹1.5 லட்சம் ரொக்கம் மற்றும் மூன்று செல்போன்களை பறிமுதல் செய்துள்ளனர். தற்போது இருவரிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.