ஆந்திரப் பிரதேசம் கர்னூல் மாவட்டம் சின்ன டிக்கூர் அருகே இன்று அதிகாலை நடைபெற்ற பேருந்து தீ விபத்தில் பலர் படுகாயமடைந்ததோடு, உயிரிழந்தோர் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது. ஐதராபாத்தில் இருந்து பெங்களூருவுக்கு பயணம் செய்த ஆம்னி பேருந்து, இருசக்கர வாகனத்தை மோதியதில் தீப்பிடித்து எரிந்தது.
விபத்து நேரத்தில் பேருந்தில் இருந்த 42 பயணிகளும் உறங்கிக் கொண்டிருந்தனர். தீ வேகமாக பரவியதால் பலர் பேருந்துக்குள் சிக்கிக்கொண்டனர். சிலர் குதித்து உயிர் தப்பினாலும், 15 பேர் உடல் கருகி முதலில் உயிரிழந்தனர். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களில் பலர் உயிரிழந்ததால், எண்ணிக்கை 23 ஆக உயர்ந்ததாக கர்னூல் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். மேலும் 18 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். விபத்து குறித்து ஆந்திரா முதல்வர் என். சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளப் பதிவில்:
“இவ்விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” எனத் தெரிவித்ததோடு,
உயிரிழந்த குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம்
காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000
உதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.



Leave a Reply