சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட செயலிகளை ஊக்குவித்ததாகும் புகாரின் அடிப்படையில், முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான கூகுள் மற்றும் மெட்டா நிறுவனங்களுக்கு அமலாக்கத் துறை (ED) சம்மன் அனுப்பியுள்ளது.
‘ஜீட் வின்’, ‘பரிமேட்ச்’, ‘லோட்டஸ் – 365’ உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்ட செயலிகள் மூலம் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடைபெற்றதாக தெலுங்கானா மாநிலத்திலிருந்து புகார்கள் எழுந்துள்ளன. இச் செயலிகளை பிரபலங்கள் விளம்பரப்படுத்த, பல கோடி ரூபாய் சம்பளமாக பெற்றதாகவும், இந்த விளம்பரங்களை நம்பி விளையாடியவர்கள் 3 கோடி ரூபாய் வரை இழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கான புகாரின் அடிப்படையில், சைபராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்ததைத் தொடர்ந்து, அமலாக்கத்துறையும் விசாரணைத் தொடங்கியுள்ளது.
29 பிரபலங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களில் நடிகர்கள் பிரகாஷ் ராஜ், விஜய் தேவாரகொண்டா, ராணா டகுபதி உள்ளிட்ட திரை பிரபலங்கள், யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் பிரபலமான ஃப்ளூயன்ஸர்களும் அடங்குவர். அவர்களின் வங்கி பரிவர்த்தனைகள் மற்றும் டிஜிட்டல் பணப்பரிமாற்றங்கள் தற்போது பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றன.
அதேபோல், இந்த செயலிகள் விளம்பரப்படுத்தப்பட்டதும், ‘ஆப் ஸ்டோர்’களில் அவை அனுமதிக்கப்பட்டதும் குறித்து கூகுள், மெட்டா ஆகிய நிறுவனங்களிடம் அமலாக்கத்துறை கேள்வி எழுப்பியுள்ளது. இந்நிறுவனங்கள், இந்த செயலிகளை தங்களின் தளங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்த அனுமதித்ததன் மூலம், சூதாட்ட பயன்பாடுகளை மக்கள் மத்தியில் பரப்பியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, கூகுள் மற்றும் மெட்டா நிறுவன அதிகாரிகள், நாளை (ஜூலை 21) அமலாக்கத் துறை அதிகாரிகள் முன் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.



Leave a Reply