ஆடி அமாவாசை: கோவை பேரூரில் நொய்யல் ஆற்றங்கரையில் தர்ப்பணம் செய்ய பக்தர்கள் திரள்

Spread the love

ஆடி அமாவாசையை முன்னிட்டு, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட ஏராளமான மக்கள் இன்று கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் திரண்டனர். அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் தொடங்கிய நிலையில், நேரம் செல்லச் செல்ல கூட்டம் பெருகியது.

இந்துக்களுக்கு மிகவும் முக்கியமானதாக கருதப்படும் ஆடி அமாவாசை, பித்ரு தர்ப்பணத்திற்கான சிறப்புநாளாகும். முன்னோர்களுக்காக திதி கொடுப்பது பித்ரு ரட்சணையாகவும், குடும்ப நலனுக்காகவும் சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக நொய்யல் ஆற்றங்கரையில் தர்ப்பணம் செய்வது வழக்கமாக இருந்தாலும், தற்போது ரூ.15 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய தர்ப்பண மண்டபத்தில், நல்லறம் அறக்கட்டளை மற்றும் அரசின் ஒத்துழைப்பில் பக்தர்கள் தர்ப்பணம் செய்தனர்.
புரோகிதர்களின் வழிகாட்டலின் பேரில், வாழை இலை, தர்ப்பை புல், எள், அரிசி, சாதம், காய்கறி உள்ளிட்டவற்றுடன் பித்ரு பூஜை நடந்தது. பின்னர் ஆற்றில் அவற்றை விட்டு முன்னோர்களை வணங்கினர்.

இதனைத் தொடர்ந்து, விநாயகர் கோவில், சப்தகன்னியர் சன்னதி மற்றும் பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் வழிபாடு செய்தனர். பக்தர்கள் நெய்தீபம் ஏற்றி தரிசனம் செய்தனர்.

இன்று காலை முதலே மக்கள் பெருமளவில் திரண்டதால், நொய்யல் ஆற்றங்கரை மற்றும் கோவில் சுற்றுவட்டாரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காவல் துறையினர் வாகனங்களை தடுத்து நிறுத்தி, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மக்கள் சாலையோரத்தில் வாகனங்களை நிறுத்தி தர்ப்பணம் செய்த இடங்களுக்கு pěய நடைபயணமாகச் சென்றனர்.