அவினாசி மேம்பாலம் எடப்பாடியின் சாதனை – முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பெருமிதம்…..

Spread the love

கோவை அவினாசி சாலையில் ஜி.டி. நாயுடு உயர்மட்ட மேம்பாலத்தை முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பார்வையிட்டார்.

அப்போது அவரை அதிமுகவினர் ஆரவாரத்துடன் மாலை அணிவித்து, பட்டாசுகள் வெடித்து, மேளதாளங்களுடன் வரவேற்றனர். மேலும், “எடப்பாடி பழனிச்சாமி வாழ்க!”, “அதிமுக வாழ்க!” என்ற கோஷங்களும் எழுப்பினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எஸ்.பி. வேலுமணி கூறியதாவது:
“கோவைக்கு கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வளர்ச்சி 5 ஆண்டுகளில் அதிமுக ஆட்சிக்காலத்தில் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தலைமையில் ஏற்பட்டது. அவினாசி சாலையில் மக்கள் கடுமையாக நெரிசலால் அவதியடைந்ததால், அங்கு மேம்பாலம் கட்ட வேண்டுமென எடப்பாடியாரிடம் கோரிக்கை வைத்தோம்.

அப்போது மிகப்பெரிய நிதி தேவைப்பட்டதால், மாநில நிதியிலிருந்து ரூ.1621 கோடி ஒதுக்கி நிர்வாக ஒப்புதல் வழங்கியவர் எடப்பாடியார். அதிமுக ஆட்சிக்காலத்தில் 55 சதவீத பாலப்பணிகள் நிறைவு செய்யப்பட்டிருந்தன. ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின் ஒன்றரை ஆண்டுகள் பணி நிறுத்தப்பட்டு, தாமதமாக இப்போது திறக்கப்பட்டுள்ளது,” என அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், “கோவையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பல மேம்பாலங்கள், சாலைகள், பைபாஸ்கள் ஆகியவற்றை எடப்பாடியார் ஆட்சியில் தொடங்கி நிறைவேற்றியோம். ஆனால், தற்போதைய அரசு இன்னும் எஸ்.ஐ.எச்.எஸ். காலனி பாலத்தை முடிக்கவில்லை,” என்றும் குற்றம் சாட்டினார்.

மேம்பாலத்திற்கு ஜி.டி. நாயுடு என்ற பெயர் சூட்டப்பட்டிருப்பது குறித்து அவர், “இது எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. ஜி.டி. நாயுடு கோவையின் பெருமை; அவரின் பெயர் கோவையின் அடையாளமாக திகழும்,” என்றும் குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து, “கடந்த 4.5 ஆண்டுகளில் திமுக அரசு கோவைக்கு புதிய திட்டம் எதுவும் அறிவிக்கவில்லை. அதிமுக ஆட்சியில் தொடங்கிய திட்டங்களையே தற்போது திறந்து வைத்து வருகின்றனர்,” என்றார்.

மேலும், “புதிய மேம்பாலத்தில் வேகக்கட்டுப்பாட்டு கேமராக்கள் பொருத்தி, சரியான டைவர்ஷன் ஏற்பாடு செய்து, விபத்துகள் தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

இறுதியாக, “இனி வரும் காலத்தில் சரவணம்பட்டி பாலம், அவினாசி – அத்திக்கடவு திட்டத்தில் விடுபட்ட குளங்கள் இணைப்பு உள்ளிட்ட நிலுவையில் உள்ள திட்டங்களுக்கு இந்த அரசு நிதி ஒதுக்க வேண்டும்,” என வலியுறுத்தினார்.