அறுபத்து மூன்று நாயன்மார்களில் சிறந்து விளங்கிய கூற்றுவ நாயனார்

Spread the love
அறுபத்து மூன்று நாயன்மார்களில் குறிப்பிடத்தக்கவர் குறுநில மன்னரான கூற்றுவ நாயனார். இவர் சிவபெருமானின் மீது தீராத பக்தியுடன் வாழ்ந்தவர். எப்போதும் ஸ்ரீ பஞ்சாட்சர மந்திரத்தை இடைவிடாமல் ஜபித்து வந்தார். சிவனடியார்களின் திருவடிகளைப் பணிந்து, அவர்களுக்கு உயர்ந்த தொண்டுகளைச் செய்தார்.

களந்தை எனப்படும் ஊரில் களப்பாளர் மரபில் பிறந்தவர். அங்கே சிற்றரசராக ஆட்சி புரிந்தார். சிவபெருமானின் திருநாமத்தை நாள்தோறும் ஓதி, அடியார்களுக்கு தொண்டு செய்ததன் பலனாக, போர்க்களத்தில் எதிரிகளுக்கு கூற்றுவன் (எமன்) போல தோன்றி வெற்றி பெற்றார். அதனால் “கூற்றுவர்” எனும் திருப்பெயரைப் பெற்றார்.

பல போர்களிலும் பல அரசர்களையும் வென்று, அவர்களின் வளங்களைப் பெற்றாலும், அந்த வெற்றிகளால் பெருமை கொள்ளாமல் இறைவனை நினைத்து வாழ்ந்தார்.

கூற்றுவ நாயனார் ஒருநாள் தில்லை நடராஜப் பெருமானின் கோவிலுக்குச் சென்று, அங்கே சோழ மன்னர்களுக்கே உரிய மணிமகுடத்தை சூடிக் கொள்ளும் ஆர்வம் கொண்டார். ஆனால் தில்லைவாழ் அந்தணர்கள், “சோழ குலத்தில் பிறந்தவர்களுக்கு மட்டுமே இதைச் சூட்டும் உரிமை உண்டு” என மறுத்தனர்.

அவர்களைத் துன்புறுத்தாமல், கூற்றுவ நாயனார் மனவேதனையுடன் இறைவனை நோக்கிப் பிரார்த்தித்தார்: “எம்பெருமானே! இந்த அடியேனுக்கு தமது திருவடியையே முடியாக அருள வேண்டும்” என்று வேண்டினார்.

அன்றிரவு அவருக்கு கனவில் காட்சி தந்த சிவபெருமான், தமது திருவடியை மணிமுடியாக அருளி ஆசீர்வதித்தார்.

சிவபெருமான் அருளிய திருவடியைத் திருமுடியாகக் கொண்டு, கூற்றுவ நாயனார் வாழ்நாள் முழுவதும் சிவபெருமானுக்கும், சிவனடியார்களுக்கும் தொண்டு செய்து, நீதியுடன் ஆட்சி செய்து, இறுதியில் உமையொருபாகர் திருவடியை அடைந்து சிவபதம் அடைந்தார்.