அரோகரா கோஷம் முழங்க மருதமலையில் சிறப்பாக நடந்த கும்பாபிஷேகம்

மருதமலை கும்பாபிஷேக்ம
Spread the love

கோவை மாவட்டத்தில், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியின் இயற்கை அழகை முத்தான முறையில் அலங்கரிக்கும் மருதமலை முருகன் கோவில் அமைந்துள்ளது. பக்தர்கள் இந்த கோயிலை முருகப்பெருமானின் ஏழாவது படைவீடாகக் கருதுகிறார்கள். இந்த கோயிலில் கடந்த 12 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டு, அதற்கான திருப்பணிகள் சில மாதங்களாக நடைபெற்றன.

கடந்த 30-ந் தேதி மாலை 6 மணிக்கு மங்கள இசை, திருமறை பாராயணம், விநாயகர் பூஜை, இறை அனுமதி ஆகிய நிகழ்ச்சிகளுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. தொடர்ந்து தினமும் காலை, மாலை யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. மேலும் முதல், இரண்டாம், மூன்றாம் கால வேள்வி பூஜைகள், திருச்சுற்று தெய்வங்களுக்கும், அடிவாரத்தில் உள்ள தான்தோன்றி விநாயகர் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களுக்கும் எண் வகை மருந்து சாற்றுதல் போன்ற பூஜைகள் சிறப்பாக நடத்தப்பட்டன.

கும்பாபிஷேக நிகழ்வில், கும்ப அலங்காரம், இறை சக்தியை திருக்குடங்களில் எழுந்தருள செய்வது, யாகசாலையில் இருந்து திருக்குடங்களை மூலவரிடம் கொண்டு செல்வது போன்ற பூஜைகள் நடைபெற்றன. நேற்று நான்காம் மற்றும் ஐந்தாம் கால வேள்வி பூஜைகள் நடைபெற்றன.

விழாவின் சிகர நிகழ்வான கும்பாபிஷேகம் இன்று அதிகாலை 4.30 மணிக்கு மங்கள இசை, திருமறை பாராயணம், மற்றும் ஆறாம் கால வேள்வி பூஜையுடன் தொடங்கியது. காலை 6 முதல் 6.45 மணிக்குள், திருச்சுற்று தெய்வங்களுக்கும், பரிவார மூர்த்திகளுக்கும் கும்பாபிஷேகம் சிறப்பாக நடத்தப்பட்டது. பின்னர் 7.30 மணிக்கு யாகசாலையில் இருந்து திருக்குடங்கள் எடுத்து கோவில் சுற்றி வலம் வருதல் நடைபெற்றது.

காலை 8.30 மணிக்கு, மருதாசலமூர்த்தி விமானம், ஆதி மூலவர் விமானம், ராஜகோபுரம், கொடிமரம், பரிவார விமானங்கள் உள்ளிட்டவற்றிற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது. பின்னர் ஆதி மூலவர், விநாயகர், மருதாச்சலமூர்த்தி, பட்டீஸ்வரர், மரகதாம்பிகை, வீரபாகு, கரிவரதராஜ பெருமாள், சண்டிகேஸ்வரர் ஆகிய தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தை ஒட்டி அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் மருதமலை கோயிலுக்கு வந்தனர். பக்தர்கள் படிக்கட்டுகள் வழியாகவும், கோவில் நிர்வாகத்தால் இயக்கப்பட்ட சிறப்பு பஸ்களில் சென்று தரிசனம் செய்தனர். கோயில் ராஜகோபுரத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டபோது, பக்தர்கள் “கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா” என்று பக்தி முழக்கங்களை எழுப்பினர்.

பக்தர்கள் கும்பாபிஷேக நிகழ்வுகளை நேரில் காணும் வகையில், மலைப்படிக்கட்டுகள் மற்றும் அடிவார பகுதியில் பெரிய எல்.இ.டி திரைகள் அமைக்கப்பட்டு, அதில் நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பாகின. கோவை மட்டுமின்றி திருப்பூர் உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்ததால், மலைப்பாதைகள் மற்றும் படிக்கட்டுகள் மக்கள் கூட்டத்தால் நிரம்பி இருந்தன.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவில் நிர்வாகம் பல்வேறு ஏற்பாடுகளை செய்திருந்தது. குடிநீர் வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சிறப்பாக இருந்தன. மேலும், பக்தர்களுக்கு நீர்மோர், குளிர்பானங்கள், அன்னதானம் வழங்கப்பட்டன.