தேர்தல் கள நிலவரம் குறித்தே ஆலோசனை நடைபெற்றதே தவிர, தொகுதி பங்கீடு குறித்து எந்தவித பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக அரசியல் சூழல் தொடர்பாக பாஜக தேர்தல் பொறுப்பாளர்களான மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் அர்ஜூன் மேக்வால் ஆகியோர் சென்னை கமலாலயத்தில் மூத்த நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்தியதாக கூறினார். தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமியையும் அவர்கள் சந்தித்து பேசியதாகவும் தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் மக்கள் தேர்தலுக்கு இன்னும் முழுமையாக தயாராகவில்லை என்ற நிலை குறித்து விவாதிக்கப்பட்டதாகவும், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற வாக்கு சதவீதம் பற்றியே பேசப்பட்டதாகவும் நயினார் நாகேந்திரன் கூறினார். ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோருடன் கூட்டணி குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்றும் அவர் விளக்கினார்.
தேர்தல் நோக்கில் திமுகவை ஆட்சியிலிருந்து அகற்றுவதே முக்கிய இலக்கு என்றும், ஒத்த கருத்துடைய அரசியல் சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என்றும் கருத்து பகிரப்பட்டதாக தெரிவித்தார்.
“அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர பகைவனும் இல்லை” என்பதையும் அவர் நினைவூட்டினார்.
நடிகர் விஜய் குறித்து பேசுகையில், தற்போது அவரை ‘ஸ்பாய்லர்’ என கூற முடியாது என்றும், தேர்தலுக்கு நெருங்கும் காலத்தில் கூட்டணிகள் தெளிவான பின் தான் அரசியல் நிலவரம் தெரியவரும் என்றும் தெரிவித்தார். தேமுதிக, பாமக கூட்டணி குறித்து பொங்கலுக்குப் பிறகு தெளிவு ஏற்படும் என்றும் கூறினார்.
கருத்துக்கணிப்புகள் குறித்து விமர்சித்த அவர், அவை விருப்பப்படி கேள்விகள் எழுப்பி முடிவுகளை வெளியிடுகின்றன என்றும், அனைத்தும் உண்மையாகாது என்றும் தெரிவித்தார்.



Leave a Reply