அபிநந்தனின் சாதனை விமானம்… விமானப்படையில் இருந்து விடைபெறுகிறது மிக் 21 !

Spread the love

கடந்த 62 ஆண்டுகளாக இந்திய விமானப்படையின் முதுகெழும்பாக கருதப்பட்ட ரஷ்ய தயாரிப்பான மிக் 21 விமானங்கள் முற்றிலும் விடை பெறுகின்றன.

கடந்த 1960ம் ஆண்டு வாக்கில் இந்திய விமானப்படையில் ரஷ்யாவின் மிக் 21 போர் விமானங்கள் இணைக்கப்பட்டன. இந்த விமானங்களுக்கு செப்டம்பர் 26ம் தேதி சண்டிகர் நகரில் நடக்கும் நிகழ்ச்சியில் முற்றிலும் விடைகொடுக்கப்படுகிறது. இதையொட்டி, இந்திய விமானப்படை தளபதி ஏர்மார்ஷல் ஏ.பி. சிங் கடந்த ஆகஸ்ட் 18 மற்றும் 19ம் தேதிகளில் பிகானிரிலுள்ளள நால் விமானப்படை தளத்தில் மிக் 21 ரக விமானங்களை இயக்கி பார்த்தார்.

பின்னர் இது குறித்து ஏ.பி சிங் கூறுகையில், ‘இந்திய விமானப்படைக்கு முக்கிய அங்கமாக இருந்த மிக் 21 போர்விமானங்கள் கிட்டத்தட்ட 62 ஆண்டுகாலம் சேவையாற்றியுள்ளன. உலகில் அதிகளவில் தயாரிக்கப்பட்ட போர் விமானங்களில் இதுவும் ஒன்று. கிட்டத்தட்ட 60 நாடுகளில் 11 ஆயிரம் மிக் 21 ரக விமானங்கள் பயன்பாட்டில் இருந்தன. கடந்த 1985 ம் ஆண்டு தேஜ்பூரில் மிக்-21 விமானத்தை முதன் முதலாக ஓட்டும் அனுபவம் எனக்கு கிடைத்தது. இது ஒரு அற்புதமான கண்டுபிடிப்பு. இந்த விமானத்தை ஓட்டி அனுபவம் பெற்ற அனைவருமே அந்த அனுபவத்தை இனிமேல் தவற விடுவார்கள். சிறந்த இடை மறிப்பு திறன் கொண்ட இந்த விமானம் விநாடிக்கு 250 மீட்டர் பறக்கும் திறன் கொண்டது. இந்தியாவிற்கு குறிப்பிடத்தக்க வகையில் இந்த விமானங்கள் சேவையாற்றியுள்ளனர். ஆனால் எல்லாவற்றிற்கும் ஒரு காலமும் நேரமும் உண்டு. அதன் தொழில்நுட்பம் காலாவதியாகிவிட்டதால், பராமரிப்பது கடினமாக உள்ளது. தேஜாஸ், ரஃபேல், எஸ்.யு -30 போன்ற புதிய விமானங்களுக்கு நகர வேண்டிய நேரம் இது. மிக் 21 , மிராஜ் ரக விமானங்களுக்கு மாற்றாகவே தேஜாஸ் விமானம் உருவாக்கப்பட்டுள்ளது. தேஜாஸ் விமானத்துக்கு ஏற்ற வகையில் ஆயுதங்களும் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்திய விமானப்படையில் மிக் 21விமானங்களின் செய்து வந்த பணியை இனிமேல் தேஜாஸ் விமானங்கள் ஏற்றுக் கொள்ளும் ‘என்றார்.

மிக் 21 போர் விமானம் முதன்முதலாக 1965ம் ஆண்டு பாகிஸ்தானுடனான போரில் பங்கேற்றது. தொடர்ந்து, 1971 பாகிஸ்தான் போரில் அதிரடியாக வங்கதேசத்துக்கு புகுந்து தாக்குதல் நடத்தியது. குறிப்பாக டிசம்பர் 14 அன்று டாக்காவில் உள்ள ஆளுநர் இல்லத்தின் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. இதையடுத்து , மறுநாளே வங்கதேச ஆளுநல் ராஜினாமா செய்தார். பின்னர், டிசம்பர் 16 ம் தேதி 93,000 வீரர்களுடன் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு பாகிஸ்தான் சரணடைந்தது. 1999 ம் ஆண்டு கார்கில் ஆபரேஷனின் போது, இந்திய எல்லைக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் அட்லாண்டிக் விமானத்தை மிக்-21 சுட்டு வீழ்த்தியது. உச்சக்கட்டமாக கடந்த 2019ம் ஆண்டு புல்வாமா தாக்குதலில் இந்திய சி.ஆர்.பி.எப் வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்ட போது, பாகிஸ்தானிலுள்ள தீவிரவாதிகள் முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, அடுத்த நாளே பாகிஸ்தானின் 24 போர் விமானங்கள் இந்திய எல்லைக்குள் நுழைய முயற்சித்தன. அப்போது, மிக் 21 விமானத்தை கொண்டு அமெரிக்க தயாரிப்பான எப்.16 போர் விமானத்தை இந்திய பைலட் அபிநந்தன் வர்தமான் சுட்டு வீழ்த்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.