பாமக நிறுவனர், தலைவர் ராமதாசுக்கும் அக்கட்சியின் செயல் தலைவராக இருந்த அன்புமணிக்கும் கடந்த சில மாதங்களாக கருத்து மோதல் ஏற்பட்டு அது இன்று உச்சத்திற்கு சென்றிருக்கிறது. கடந்த மாதம் 17ம் தேதி நடந்த பாமக பொதுக்குழுவில் அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு அவற்றுக்கு கடந்த 31ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டது. 31ம் தேதிக்குள் பதில் வராததால் கடந்த 4ம் தேதி அன்று நடந்த பாமக நிர்வாகக்குழுவில் அன்புமணிக்கு செப்டம்பர் 10ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அதன்படி நேற்று வரையிலும் அன்புமணியிடம் இருந்து விளக்கம் வராததால், அன்புமணி மீது கட்சி விரோத நடவடிக்கை எடுத்துள்ளார் ராமதாஸ்.
இது குறித்து ராமதாஸ் கூறியுள்ளதாவது , பாமக நான் தொடங்கிய கட்சி; இதில் எனக்குத்தான் அதிகாரம்.மகனாகவே இருந்தாலும் இந்த கட்சியை உரிமை கொண்டாட அன்புமணிக்கு உரிமை இல்லை. கட்சி தலைமைக்கு கட்டுப்படாமல் தான் தோன்றித்தனமாக செயல்பட்டு அரசியல்வாதி என்ற தகுதியற்றவர் என்பத நிரூபித்துள்ளார் அன்புமணி. அரும்பாடு பட்டு வளர்த்த கட்சியை அழித்த அன்புமணியின் செயலால் இரும்பு போன்ற என் இதயம் நொறுங்கிவிட்டது. கட்சி வளர்ச்சிக்கு தடையாக இருந்த அன்புமணியை நீக்கிவிட்டோம். பாட்டாளி மக்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அன்புமணி நீக்கம். செயல் தலைவர் பதவிக்கு விரைவில் வேறு ஒருவரை நியமிப்பேன். குற்றச்சாட்டுகளுக்கு தன் தரப்பில் எந்த நியாயமும் இல்லை என்பதால்தான் அன்புமணி விளக்கம் அளிக்கவில்லை. விளக்கம் அளிக்கவில்லை என்பதால் அவர் தனது குற்றங்களை ஒப்புக்கொண்டாகவே அர்த்தம். குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்காததால் பாமகவின் ஒழுங்கு நடவடிக்கை குழு அடிப்படையிலேயே அன்புமணி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
பாமகவின் வளர்ச்சி மட்டுமே முக்கியம் என்பதை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.என் பெயரை அன்புமணி பயன்படுத்தக்கூடாது; இனிஷியலை மட்டும் பயன்படுத்தலாம். தேவைப்பட்டால் அன்புமணி தனிக்கட்சி ஆரம்பிக்கலாம். அன்புமணியுடன் இருப்பவர்கள் மீது வருத்தம் இருந்தாலும் மன்னிக்கத் தயார். தனியாகவோ, கூட்டமாகவோ வந்து என்னை சந்தித்தால் மன்னித்து ஏற்றுக்கொள்ளத் தயாராக உள்ளேன். கட்சியினர் யாரும் இனிமேல் அன்புமணியுடன் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது. மீறினால் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



Leave a Reply