,

அனுமதியின்றி பிரச்சாரம் செய்ததால் வேலூர் இப்ராஹிம் கைது

vellore ibrahim
Spread the love

கோவை மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக மாநில தலைவர் அண்ணாமலை களமிறங்கி உள்ளார். அவருக்கு ஆதரவாக பல்வேறு முக்கிய பிரமுகர்களும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை தடாகம் சாலை இடையர்பாளையம் பகுதியில் அக்கட்சியின் சிறுபான்மையினர் பிரிவு தேசிய தலைவர் வேலூர் இப்ராஹிம் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக வருகை தந்தார். அவருடன் 30க்கும் மேற்பட்ட பாஜகவினரும் அப்பகுதியில் திரண்டனர். அப்போது அங்கு வந்த போலீசாரும் தேர்தல் பறக்கும் படையினரும் உரிய அனுமதியின்றி பிரச்சாரம் மேற்கொள்ளக் கூடாது என அறிவுறுத்தினர். இதனால் போலீசாருடன் வேலூர் இப்ராஹிம் மற்றும் பாஜகவினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கிருந்து கிளம்பி செல்வதாக கூறிய வேலூர் இப்ராஹிமும் பாஜகவினரும் அருகாமையில் உள்ள கடைகளுக்கு சென்று சிறு சிறு பொருட்களை விலைக்கு வாங்கி அங்கு இருந்த பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தனர். பூக்கடையில் ரோஜா பூ, டீ கடையில் பிஸ்கட், பழக்கடையில் திராட்சை ஆகியவற்றை வாங்கி அவர்கள் பிரச்சாரம் மேற்கொண்டனர். இதனிடையே அனுமதியின்றி பிரச்சாரம் மேற்கொண்டதாக வேலூர் இப்ராஹிம் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்து கவுண்டம்பாளையம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அவரை கைது செய்த போது பாஜகவினர் சிலர் போலீஸ் வாகனத்தின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அனைவரையும் அங்கிருந்து கலைந்து போக செய்தனர்.