நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருகிறார் என்றதும், அவரை கன்னடர் என்றும், வேற்று மொழிக்காரர் தமிழ்நாட்டை ஆளக்கூடாது என்று கடுமையாக விமர்சனம் செய்து வந்த நாம் தமிழர் கட்சியின் சீமான், ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்றதும் அவரை விமர்சனம் செய்வதை நிறுத்தி இருந்தார். நாம் தமிழர் கட்சித் தலைவர் நடிகர் ரஜினிகாந்தின் திரையுலகில் ரஜினிகாந்தின் 50வது ஆண்டு விழாவை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்திருந்தார். தமிழ்த்திரையுலகின் தன்னிகரில்லா உச்சநட்சத்திரமாக, தனிப்பெரும் ஆளுமையாகத் திகழும் பெருமதிப்பிற்குரிய ஐயா ரஜினிகாந்த் அவர்கள் தம்முடைய திரைவாழ்வின் பொன்விழா ஆண்டினை காண்பது மிகுந்த மனமகிழ்வை தருகின்றது!
நீண்ட நெடிய தம் கலைப்பயணத்தில் இரண்டு தலைமுறை இளையோர், பெண்கள், குழந்தைகள், முதியோர் என அனைத்து தரப்பு மக்களும் விரும்பும் திரைக்கலைஞராக திகழ்ந்து, தொடர்ந்து 50 ஆண்டுகளாக உச்சநட்சத்திரமாக ஒளிர்வது இந்தியப் பெருநாட்டில் இதுவரை எவரும் நிகழ்த்திடாத ஈடு இணையற்ற தனிமனித பெருஞ்சாதனையாகும்.ஐயா ரஜினிகாந்த் அவர்கள், இன்னும் பற்பல ஆண்டுகள் தம் இனிய கலைப்பயணத்தைத் தொடர வேண்டுமென்ற எம் பெருவிருப்பத்தைத் தெரிவிப்பதோடு, ‘கூலி’ திரைப்படம் மாபெரும் வெற்றிப்படைப்பாக அமைய என்னுடைய அன்பும் வாழ்த்துகளும்!’’ என்று வாழ்த்தியிருந்தார். தனக்கு வாழ்த்து தெரிவித்த பலருக்கும் நன்றி தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த் சீமானை கண்டு கொள்ளவில்லை. நன்றியும் கூறவில்லை. சீமானுக்கு நன்றி தெரிவிக்காததால் அந்த ஆத்திரத்தில்தான் இன்று துப்புரவு பணியாளர்கள் விவகாரம் தொடர்பான கேள்விக்கு, ‘’அந்த கூலியும் காலி இந்தக் கூலியும் காலி’’ என்று சீமான் விமர்சித்தார். எல்லோரும் வாழ்த்து சொன்ன நாளில் சீமானும் வாழ்த்து சொல்லி இருந்தால் அவருக்கும் சேர்த்து நன்றி சொல்லி இருப்பார் ரஜினி. பிரதமர் , முதல்வர் என்பதால் தாமதமாக சொன்னாலும் தனித்தனியாக அவர்களுக்கு நன்றி சொல்லி இருக்கிறார். சீமான் தவிர்த்து ஓபிஎஸ்சும் கூட தாமதமாக வாழ்த்து சொல்லி இருக்கிறார். இதில் சீமான் ஆத்திரப்பட வேண்டியதில் நியாயமில்லை என்கிறார்கள் ரஜினி ரசிகர்கள்.



Leave a Reply